Published : 10 Apr 2023 06:08 AM
Last Updated : 10 Apr 2023 06:08 AM

உள்ளூரில் வேரூன்றி உலக அளவில் செயல்பட வேண்டும்: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்பு நேர்காணல்

தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கிறது கோவிந்தபேரி. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இயற்கை எழில் கொஞ்சும். கூடவே வறுமையும். முள்செடிகள், லாரி டயர் பதிந்த மண்பாதை, மாட்டு சாணத்தின் நெடி, பெட்டிக்கடையையொட்டி அமைந்திருக்கும் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை, பள்ளிவிட்ட கையோடு அம்மாவுடன் காட்டு வேலைக்குச் செல்லும் அரசுப் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகள், சட்டைப் பட்டனை வரிசை மாற்றி போட்டிருக்கும் சிறுவன் என கிராமத்துக்கான எல்லா சாயலும் கொண்ட ஒரு கிராமம்தான் கோவிந்தபேரி. ஆண்டுக்கு ரூ.8,500 கோடி வருவாய் ஈட்டும், இந்தியாவின் முன்னுதாரண மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான சோஹோவின் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு இந்தக் கிராமத்தில்தான் வசிக்கிறார்.

ஸ்ரீதர் வேம்புவின் சொந்த ஊர் இதுவல்ல. அவர் பிறந்தது தஞ்சாவூர். வளர்ந்தது சென்னை. படித்தது, வேலை பார்த்தது அமெரிக்கா. 1996-ம் ஆண்டு சோஹோ நிறுவனத்தை சென்னையில் தொடங்கியவர், மேற்குத் தொடர்ச்சி மலையின் ரம்மியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, 2011-ல் தென்காசி மத்தளம்பாறையில் சோஹோவுக்கு பெரிய அளவில் அலுவலகம் ஒன்றை திறந்தார். தற்போது இங்கு 700 பேர் பணிபுரிகிறார்கள். சோஹோவுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், இத்தாலி,ஸ்பெயின் என பல நாடுகளிலும் அலுவலகங்கள் உண்டு.

சோஹோ அதன் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, அதன் சமூக முன்னெடுப்புக்காகவும் கவனிக்கப்படும் நிறுவனம். கிராமப்புற வளர்ச்சியைதன்னுடைய இலக்காக முன்னிறுத்துபவர் ஸ்ரீதர் வேம்பு. அவரது இந்த இலக்கின் அடிப்படையிலேயே சோஹோ நிறுவனத்தின் செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

கிராமங்கள் பொருளாதாரரீதியாக தன்னிறைவுபெற வேண்டுமென்றால், அங்கு தொழில் செயல்பாடுகள் நிகழ வேண்டும்; அதற்கானகல்வி அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நிறுவனம் மட்டுமல்லாது, கோவிந்தபேரியில் ஒரு சிறு பள்ளியையும் நடத்தி வருகிறார் வேம்பு.

2020-ம் ஆண்டு கரோனா ஊரடங்கு சமயத்தில், தென்காசியை சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது கலைவாணி கல்விமையம். 3 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அப்பள்ளியில் இப்போது 160 மாணவர்கள் பயில்கிறார்கள். எல்லோரும் வறுமையான குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பயிற்றுவிக்க 20 ஆசிரியர்கள் முழு நேரமாக பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வழமையான பள்ளிப் பாடங்கள் மட்டுமல்லாது, சிலம்பம், நடனம் என மண் சார்ந்த கல்வியும்அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மென்பொருள் பொறியியலாளராக சோஹோவில்வேலைக்குச் சேர்ந்த அக்‌ஷயா சிவராமன், தற்போது கலைவாணி கல்வி மையத்தின்செயல் பாட்டைக் கவனித்துக்கொள்கிறார்.தீர்க்கமான பார்வை கொண்ட பெண்ணாக வெளிப்படுகிறார்.

இந்தப் பள்ளியிலிருந்து நடந்துபோகும் தொலைவில்தான் தர் வேம்புவின் வீடுஇருக்கிறது. பழங்கால முறையில் கட்டப்பட்டவீடு. வெளியில் வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆனால், வீட்டினுள் குளுமை. ஸ்ரீதர் வேம்புடனான உரையாடல் தொடங்கியது…

கலைவாணி கல்வி மையம்

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் மென்பொருள் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்கள் மென்பொருள் துறையில் உருவாகி வந்த வேலைவாய்ப்புகள் வழியாக பொருளாதாரரீதியாக மேம்பட்டன. அதேசமயம், மென்பொருள் துறை வளர்ந்த அளவுக்கு மற்றதுறைகளில் வளர்ச்சி நிகழவில்லை. இது ஒருவகையான ஊதிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணத்துக்கு, ஐடி துறையில் நுழையும் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு உள்ளாகவே 1 லட்சம் ரூபாய் சம்பளத்தை எளிதில் எட்டி விட முடிகிறது. ஏனையதுறையில் வேலை பார்ப்பவர் ஐந்தாண்டுகளில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தை எட்டுவதே சிரமமாக உள்ளது. மருத்துவம் படிப்பதைவிட, ஐடி துறையில் வேலைக்குச் சேரலாம் என்ற முடிவுக்கு வரும்அளவுக்கு ஏனைய துறைகளுக்கும் ஐடி துறைக்கும் இடையே ஊதிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனால், மாணவர்கள் ஒரேடியாக ஐடி துறையை நோக்கி நகரும் போக்கு உருவாகி இருக்கிறது. விளைவாக, ஏனைய துறைகள் தேக்கத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவகையில் இந்தப் போக்கு, நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வை எப்படி பார்க்கிறீர்கள்? இதை சரி செய்வதற்கான வாய்ப்புகள் என்ன?

உண்மைதான். மென்பொருள் துறை அளவுக்கு ஏனைய துறைகளில் ஊதியம் கிடைப்பதில்லை. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, மென்பொருள் துறைக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் சந்தை வாய்ப்பு உருவானது. இதனால், முதலீட்டாளர்கள் இத்துறையில் கோடிகோடியாக முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

இதனால் இத்துறை மிகப் பெரும் வளர்ச்சியை எட்டியது. ஆனால், தற்போது மென்பொருள் துறைக்கு முதலீடுகள் வருவது குறையத் ஆரம்பித்து இருக்கிறது. அந்த முதலீடு மற்ற துறைகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளது. முதலீட்டாளர்கள் உற்பத்தி, விவசாயம் உட்பட ஏனைய துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றனர்.

இதனால், தற்போது சூழல் மாறி வருகிறது. சமீபத்தில் கோவை சென்றிருந்தபோது பார்த்தேன். வெவ்வேறு துறைகள் சார்ந்து சின்னச் சின்னதாக நிறைய புதிய நிறுவனங்கள் உருவாகி இருந்தன. இந்த மாற்றம் வரும் காலங்களில் பரவலாகும். அப்போது ஊதிய ஏற்றத்தாழ்வு ஓரளவுக்கு மட்டுப்படும்.

தொழில்நுட்ப துறையில் சமீப காலமாக வேலைநீக்கம் தீவிரம் அடைந்திருக்கிறது. கூகுள், மெட்டா, அமேசான், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் ஆரம்பித்து அக்சன்சர் வரையில் சிறிதும், பெரிதுமாக ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனகள் வருவாய் இழப்பைக் காரணம் காட்டி ஊழியர்களை நீக்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம், பிளாக்செயின், மெட்டாவர்ஸ்என உலகம் டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் வழியாகவேஇந்த மாற்றம் சாத்தியம். அந்த வகையில், தொழில்நுட்ப துறையில் ஏற்படும் தேக்கநிலையை நிரந்தரமற்ற ஒன்றாகவே நாம் கருத முடியும். அப்படி இருக்கையில் ஏன் நிறுவனங்கள் இவ்வளவு அதிக அளவில் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குகின்றன. உண்மையில், தொழில்நுட்ப துறையில் என்ன பிரச்சினை?

தொழில்நுட்ப துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பல ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்திருக்கிறது. இதனால், அந்நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொள்கின்றன.

கரோனா சமயத்தில் உலக அளவில் மத்தியவங்கிகள் தங்கள் நிதிக் கொள்கையில் மேற்கொண்ட தவறான முடிவுகள்தான் தற்போதைய நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என்று நான் சொல்வேன். கரோனா சமயத்தில், பொருளாதாரம் முடக்கம் கண்டது. இதனால், பணப் புழக்கத்தை அதிகரிக்க மத்திய வங்கிகள் நிதிக் கொள்கையில் மாற்றங்கள் செய்தன.

முதலீட்டாளர்கள் வங்கிகளிடமிருந்து மிகக் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இதனால், அத்துறை சார்ந்த நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கையில் இறங்கின. தேவைக்கும் அதிகமாக ஆட்களை வேலைக்கு எடுத்தன. கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில்மட்டும் 70 சதவீதம் அளவில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்தன. முதலீடுகள் தாராளமாக வந்ததால் புதிய புதிய திட்டங்களை மேற்கொண்டன.

கரோனா நெருக்கடியிலிருந்து உலகம் இயல்புநிலைக்கு திரும்பிய பிறகு தங்கள் வளர்ச்சி இன்னும் வேகமாகும் என்று அந்நிறுவனங்கள் நினைத்தன. ஆனால், கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நிலைமை மோசமானது. விநியோகச் சங்கிலி நெருக்கடி, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக பணவீக்கம் தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. இதனால், அந்நிறுவனங்கள் தடுமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்தச் சூழலில்தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை நீக்கத்தை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு நகர்ந்துள்ளன. தொழில்நுட்பத் துறையில் நிலவும் தேக்கம் நிரந்தரம் அல்லது நிரந்தரமற்றது என்பதைத் தாண்டி தற்போதைய சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது. முதலீடுகள் இனி எந்த அளவுக்கு வரும்என்ற சந்தேகம் நிறுவனங்களிடையே எழத் தொடங்கி இருக்கிறது. இதனால், அவை தங்கள்செலவினங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடுதான் வேலைநீக்கம்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) எவ்வளவு திறன்மிக்கதாய் இருக்கும் என்பதை சாட்ஜிபிடி மென்பொருள் உலகத்துக்குக் காட்டி இருக்கிறது. கல்வி, மருத்துவம், வர்த்தகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஏஐ மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஏஐ தீவிர வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் முன்வைக்கப்படுகிறது. தொழில்புரட்சி மனிதனின் உடல் உழைப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. கணினி மற்றும் இணையம் மனிதனின் மூளை திறனில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இவற்றையெல்லாம்விட, மனிதகுல போக்கில் ஏஐ பல மடங்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்தத் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

உண்மையில் ஏஐ என்ன விளைவுகளை ஏற்படுத்தும், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்து இன்னும் போதிய தெளிவு உருவாகவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். மனிதகுலத்தில் மிகப் பெரும் பாய்ச்சலை ஏஐ நிகழ்த்த உள்ளது.

ஏஐ மூலம் நிறைய புதிய மாற்றங்கள் உருவாகும். உற்பத்தி பெருகும். இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். நிறையபுதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். அதேசமயம் ஏஐ முறையாக கையாளப்படாவிட்டால் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதில் மிக அடிப்படையானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்கோடிக்கணக்கான பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதற்கான மாற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஏஐ என்பது தவிர்க்க முடியாதது. அது நிகழ்ந்தே தீரும். அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் உள்ளது. அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று உலக நாடுகளிடையே புரிந்துணர்வு இருக்கிறது. குளோனிங் தொழில்நுட்பம் மீதும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒரு புரிந்துணர்வை ஏஐ சார்ந்து உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மிகக் குறிப்பாக, ஏஐ சார்ந்து குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும்சூழல் உருவாகக் கூடாது. அப்படி உருவானால்அது மிகப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா இதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் போக்குக்கு மாற்றான கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா முன்னுதாரண நாடாக உள்ளது. மிகச் சிறந்த உதாரணம் யுபிஐ. அடுத்ததாக ஒஎன்டிசி. இ-காமர்ஸ் துறையில் ஒரு சில பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம்செலுத்திவந்த நிலையில், அதை ஜனநாயகப்படுத்தும் வகையில் ஓஎன்டிசி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏஐ சார்ந்தும் இந்த ஜனநாயகப்படுத்தல் நிகழ வேண்டும்.

சோஹோ நிறுவனத்தின் அடுத்தகட்ட பயணம் என்ன?

உள்ளூரில் வேரூன்றி உலகளாவிய அளவில் செயல்படுவதுதான் சோஹோவின் இலக்கு. இதற்கான பாதையை வலுப்படுத்தி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிற்றூர்களில் அலுவலகம் திறந்து வருகிறோம்.

எங்கள் அலுவலகங்களை ஹப், ஸ்போக் என இருவகைப்படுத்துகிறோம். ஸ்போக் அலுவலகங்கள் 100 ஊழியர்களைக் கொண்ட உள்ளூர் அளவிலான சிறு அலுவலகங்களாக செயல்படும். ஹப் என்பது 1,000 ஊழியர்களைக் கொண்ட அப்பிராந்தியத்துக்கான தலைமை அலுவலகம்போல செயல்படும்.

ஸ்போக் அலுவலகங்கள் என்பவை கிராமபஞ்சாயத்துகள், நகராட்சிகள் போன்றவை என்றால், ஹப் அலுவலகங்கள் என்பவை மாநகராட்சி போன்றவை. தற்சமயம், இந்தியாவில் 30 ஸ்போக் அலுவலகங்களையும், 5 ஹப் அலுவலகங்களையும் கொண்டுள்ளோம்.

ஐரோப்பாவில் எஸ்டோனியா என்று ஒரு சிறிய நாடு உண்டு. பத்து லட்ச மக்கள் தொகை கொண்ட வளமிக்க நாடு. எனக்கு நமது ஒவ்வொரு மாவட்டங்களையும் எஸ்டோனியாவாக பார்க்கத் தோன்றும். அந்த அளவுக்கு நம் மாவட்டங்களில் மனித வளங்கள் உள்ளன. ஆனால், நம்முடைய வளர்ச்சி பெரு நகரங்களை மையப்படுத்தியதாக இருக்கிறது.

அது சரியான வளர்ச்சி அல்ல. ஒவ்வொரு மாவட்டங்களும் அதில் உள்ள ஒவ்வொரு நகரங்களும் அங்கிருக்கும் ஒவ்வொரு கிராமங்களும் தங்கள் அளவில் தங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதன் வழியாகவே நாம் வளர்ச்சியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x