Published : 02 Mar 2020 09:50 AM
Last Updated : 02 Mar 2020 09:50 AM

உலகை ஆளப்போகும் ஏஐ

முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in

சமீப காலமாக உலக நாடுகள் அனைத்தும் தகவல்களின் முக்கியத்துவம் பற்றி தீவிரமாக பேசத் தொடங்கியுள்ளன. தகவல்கள்தான் இனி ‘புதிய எண்ணெய் வளம்’ (Data is new oil) என்றும் ‘புதிய பணம்’ (Data is new money) என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

தகவல்கள் ஏன் இப்போது இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளன? ஏனென்றால், நாம் தற்போது புதிய யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம். நீண்ட கால பரிணாம வளர்ச்சியில் மனிதகுலம், அதன்தற்போதைய நிலையை எட்டியுள்ளது. மனிதன் குரங்கிலிருந்து தோன்றியதை மட்டுமே பரிணாம வளர்ச்சியாக நாம் புரிந்துகொள்கிறோம்.

ஆனால், உலகம் பல வழிகளில் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது; மொழிகூட பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம்தான். அந்தவகையில் நாம் தற்போது வந்தடைந்திருப்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் காலகட்டம். மனிதன் இரு பெரும் திறன்களோடு உலகில் தோன்றினான். ஒன்று உடல் திறன்; மற்றொன்று மூளைத் திறன். உடல் திறனைக் கொண்டு தனக்கான உணவை அவன் தேடிக் கொண்டான்.

மூளைத் திறன் மூலம் நிகழ்வுகளை உள்வாங்குதல், அதிலிருந்து கற்றுக் கொள்ளுதல், முடிவெடுத்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடிந்தது. இத்திறன் உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது. வேளாண் புரட்சி, தொழிற்புரட்சி காலகட்டத்தில் தோன்றிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதனின் உடல் திறன் சார்ந்த பணிகளை பதிலீடு செய்தன.

ஆனால், தற்போது நாம் நுழைந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் காலகட்டம் மனிதனின் மூளைத் திறனை பதிலீடு செய்யக்கூடியது. அதாவது, உயிரனங்களின் தனித்தன்மையான மூளைத் திறனை இயந்திரங்கள் பெறத் தொடங்கியுள்ளன. ஆம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பிரதான அம்சமே, மனிதர்களைப் போல் தகவல்களை அலசி, அதற்கேற்ப முடிவெடுக்கும் திறன் பெற்றது என்பதுதான். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துக்கான ஆதார சக்தி தகவல்கள்தான். எனவேதான் தற்போது தகவல்கள் பெரும் மதிப்பைப் பெருகின்றன. இந்தப் பரிணாமம் எவ்வாறு நிகழ்ந்தது?

வேளாண் புரட்சி

பொருளாதார அறிஞரும் கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான யானிஸ் வரூபாகிஸ் (Yanis Varoufakis), ‘என் மகளிடம் பொருளாதரத்தைப் பற்றி பேசுகிறேன்’ (Talking to My Daughter About the Economy) என்ற நூலில் வேளாண் புரட்சியின் தோற்றுவாயை எழுதுகிறார். மனிதன் ஆரம்பத்தில் அன்றன்றைக்கான உணவுகளைக் காட்டில் வேட்டையாடிப் பெற்றுக்கொண்டான். ஆனால், எல்லா நிலப்பரப்பும் காடுகளாக இல்லையே? ஒவ்வொரு பிராந்தியங்களும் வெவ்வேறு நில அமைப்பைக் கொண்டதாக இருந்தன.

காடுகளில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடுதலை முழுமையாக நம்பி இருந்தனர். சமவெளிகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் உணவுத் தேவைக்கான வழியைத் தேடியதன் விளைவே வேளாண்மை. இயற்கை தருவதை மட்டும் பெற்றுக் கொண்டிருந்த மனிதன், அதை உற்பத்தி சூழலுக்கு உட்படுத்தினான்.

அதாவது நிலத்தில் பயிரிட்டு உணவுப் பயிர்களை வளரச் செய்தான். இது மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல். காடுகளில் வாழ்ந்தவர்களுக்கு எதிர்காலத்துக்கென சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஆனால், வேளாண் நிலம் அவ்வாறானது அல்ல. பெரும் மழைக்காலங்களில் பயிர்கள் அழிந்துவிடும் என்ற நிர்பந்தத்தில், அன்றைய பயன்பாட்டுக்குப்போக தானியங்களைக் கூடுதலாகச் சேமிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. உலகை பெரும் மாற்றத்தை நோக்கி தள்ளிய ‘உபரி’இவ்வாறுதான் உருவானது என்று அதன் பின்னணியை வரூபாகிஸ் எழுதுகிறார்.

அதைத் தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்குவதற்கு தொழில்நுட்பங்களின் தேவை ஏற்படுகிறது. இவ்வாறு வேளாண்மைக்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் நீட்சியாக அடுத்த யுகத்துக்குள் மனிதகுலம் நுழைகிறது.

தொழிற்புரட்சி

அதுவரை தன் உடலை மூலதனமாகக் கொண்டு நிலத்தை உழுது உற்பத்தி செய்து வந்த மனிதன், தொழிற்புரட்சியின் விளைவால் இயந்திரங்களின் உதவியோடு உற்பத்தியைத் தொடர்ந்தான்; நிலத்திலிருந்து விலகி இயந்திரங்களை இயக்குபவனாக மாறுகிறான். இயந்திரங்கள் பல்கிப் பெருகத் தொடங்கின. தொழிற்புரட்சி தொடங்குவதற்கு அடித்தளமான, ஆரம்பகட்ட நிகழ்வுகளுள் இது முதன்மையானது. பிறகு நீராவி இன்ஜின் கண்டுபிடிக்கப்படுகிறது.

அது உலகைப் பெரும் பாய்ச்சலுக்கு உட்படுத்தியது. இது பரிணாமத்தின் அடுத்த நிகழ்வான கணினிக்கு இட்டுச் சென்றது. கணினி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. மனித வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளும் கணினியை மையம்கொண்டே உருவாகத் தொடங்கின.

அதையொட்டி இணையம் கண்டுபிடிக்கப்படவே, உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கியது. இணையம் - கணினி இணைவு உருவாக்கிய யுகத்துக்குள்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கணினித் தொழில்நுட்பமும் தகவல்களை அலசி, பதில்களைத் தரக் கூடியதுதான்; எனில், கணினியில் இருந்து செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேறுபடுகிறது? வழமையான கணினி செயலிக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான வேறுபாட்டை இந்த உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஆல்ஃபாஜீரோ, ஸ்டாக்ஃபிஷ் என்ற இரு கணினிகளுக்கும் இடையே 2017-ல் செஸ்போட்டி நடத்தப்பட்டது. வழமையான செயல்திறன் கொண்ட கணினியான ஸ்டாக்ஃபிஷ்ஷில், உலகின் முன்னணி செஸ்வீரர்களின் நகர்வுகள் உள்ளீடு செய்யப்பட்டிருந்தன. உலக செஸ் சேம்பியன்கள் ஸ்டாக்ஃபிஷ்ஷுடன் மோதினர். ஸ்டாக்ஃபிஷ் அவர்களை எளிதில் வீழ்த்தியது. இத்தகைய திறன் கொண்ட கணினியுடன் போட்டியிட, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஆல்ஃபாஜீரோ உருவாக்கப்பட்டது.

ஸ்டாக்ஃபிஷ் போலல்லாமல் ஆல்ஃபாஜீரோவுக்கு செஸ் விளையாட்டின் விதிகள் மட்டும் உள்ளீடு செய்யப்பட்டன. நான்கு மணி நேரத்தில் அந்த விதிகளை சோதித்து அறிந்தது. அவ்வளவுதான் ஆட்டத்துக்குத் தயார். ஸ்டாக்ஃபிஷ்ஷுக்கும் ஆல்ஃபாஜீரோவுக்கும் இடையே 100 ஆட்டங்கள் நடந்தன. வெறும் நான்கு மணி நேரமே பயிற்றுவிக்கப்பட்ட ஆல்ஃபாஜீரோ, 28 போட்டிகளில் வென்றது.

72 போட்டிகள் டிராவில் முடிந்தன. ஆனால், ஒரு போட்டியில்கூட ஆல்ஃபாஜீரோ தோற்கவில்லை. ஸ்டாக்ஃபிஷின் நகர்வு எல்லைக்கு உட்பட்டது. அதற்கு உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களை அடிப்படையில் மட்டுமே தன் நகர்வுகளை மேற்கொள்ளும். ஆனால், ஆல்ஃபாஜீரோ அவ்வாறனது அல்ல. வெறும் விளையாட்டு விதிகளை உள்ளீடு செய்ததும் அது அனைத்து சாத்தியங்களையும் கன விநாடியில் அலசி முடிவெடுக்கும் திறன் பெற்றது. நவீன தொழில்நுட்பம் வந்து நிற்கும் புள்ளியும் அதுதான்.

கலைகளிலும்...

இசை, இலக்கியம், ஓவியம் உள்ளிட்ட கலை வடிங்களையும் தற்போது செயற்கை நுண்ணறிவு செய்யத் தொடங்கியுள்ளது. யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) எழுதிய ‘21-ம் நூற்றாண்டுக்கு 21 பாடங்கள்’ (21 Lessons for the 21st Century) என்ற புத்தகம் மனிதகுலம் தற்போது எட்டியுள்ள பரிணாமத்தையும், அதன் விளைவால் மாறியுள்ள உலகப் போக்கையும் தீவிரமாக ஆராய்கிறது. கலை வடிவங்கள் மனித உணர்ச்சியுடன் தொடர்புடையவை. இதை எவ்வாறு செயற்கை நுண்ணறிவினால் நிகழத்த முடியும் என்ற கேள்வி எழலாம்.

உணர்ச்சி என்பது வேதியியல் செயல்பாடு. சில பாடல்கள் கொண்டாட்ட மனநிலைக்கும், சில சோகமான மனநிலைக்கும் நம்மை இட்டுச் செல்கின்றன. நம்மில் சோகத்தைத் தூண்டுவது எது, கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்வது எது என்பதை செயற்கை நுண்ணறிவு ஆராயும். பிறகு அந்த மனநிலைக்குத் தேவையான இசைத் துணுக்குகளை உற்பத்தி செய்யும் என்கிறார் ஹராரி.

வேலைவாய்ப்பு

மனிதர்களைவிட சிறப்பாக மொழிபெயர்க்கும் திறனை 2024-ல் செயற்கை நுண்ணறிவு அடையும்; 2026-ல் பள்ளி கட்டுரைகளை எழுதும் அளவிற்கு அது மேம்படும்; 2027-ல் தானாகவே கார்களை இயக்கும்; 2049-ல் புத்தகமே எழுதும்; உட்சபட்சமாக 2053-ல் அருகில் ஒரு மருத்துவரும் இல்லாமலே அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு விஸ்பரூம் எடுக்கும் என்று ஆக்ஸ்போர்ட் மற்றும் யேல் பல்கலைகழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மனிதர்களும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கான ஆதார நிரல்களை எழுதுபவர்கள், தகவல் ஆய்வாளர்கள் என செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைவாய்ப்புகள் தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதத் தேவைகள் அனைத்தும் தற்போது வணிகமாக மாற்றப்படுகின்றன. ஸ்டார்ட் அப்-களின் தாரக மந்திரமே இதுதான். மிகச் சிறந்த உதாரணம் ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, ஒயோ. இந்நிறுவனங்களின் அனைத்துச் செயல்பாடுகளும் செயற்கை நுண்ணறிவு வழியே சாத்தியப்படுகின்றன.

அந்த வகையில் சந்தை நிலவரத்தை ஆராய்தல், நிதி ஆலோசனை ஆகிய தொழில்களை விரைவிலேயே செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாக நிரப்பும். இத்தொழில்கள் பெரும்பாலும் தகவல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டவை. வருங்காலத்தில் ஒரு நாட்டின் பட்ஜெட்டை உருவாக்க பொருளாதார நிபுணர்களின் தேவை இருக்காது; செயற்கை நுண்ணறிவு இயந்திரம் போதும்.

நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அதுவரையிலான தகவல்களை உள்ளீடு செய்தால், இந்த ஆண்டு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து முடிவுகளையும் அதுவே தெரிவிக்கும். தற்போது மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைக்கும் பணிகளை அது மேற்கொள்கிறது.

விளைவாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களால் வருங்காலத்தில் மனிதர்கள் வேலை இழப்பார்கள் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இந்த மாற்றம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிகழ்ந்தேறக்கூடியது. இது உலகின் அடுத்தகட்ட பரிணாமம். தனிப்பட்ட நபர் ஒருவரின் முடிவால் விளைவது அல்ல இது. மாறாக, மனிதர்களின் சிந்தனை மற்றும் உடல் திறன் அடுத்த கட்டத்தை எட்டியதன் நீட்சி.

அடுத்தக் கட்டத்தை நோக்கி....

தொழிற்புரட்சியின் ஆரம்ப கட்டத்தில், விவசாயக் கூலிகளின் வேலை பறிபோகும் என்ற அச்சம் நிலவியது. ஆனால், நிலத்தை நேரடியாக உழுது கொண்டிருந்தவர்கள் இயந்திரங்களை இயக்கக்கூடியவர்களாக மாறினார்கள். அதன் பிறகு கணினி வந்தபோது, தொழிற்சாலையில் வேலை இழப்பு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், தொழில்-நிர்வாக அமைப்பு கணினியை மையப்படுத்தி தன்னைத் தகவமைத்துக் கொண்டது. அது வேறு பரிமாணங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

மொத்தத்தில் புதிய தொழில்நுட்பங்களின் வருகை என்பது வேலைகளை அழித்தது என்பதைவிட வேலைகளின் தன்மைகளை மாற்றி அமைத்தன எனலாம். ஒவ்வொரு புரட்சியின் வழியாக சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறது. இனி, செயற்கை நுண்ணறிவு அவ்வாறான ஒரு புதிய உலகைக் கட்டமைக்க உள்ளது; நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x