Last Updated : 26 Jul, 2015 11:53 AM

 

Published : 26 Jul 2015 11:53 AM
Last Updated : 26 Jul 2015 11:53 AM

முகங்கள்: பிரமிப்பூட்டும் தனிநபர் அருங்காட்சியகம்!

என்சைக்ளோபீடியாவில் உள்ள வார்த்தைகள் எல்லாம் உருவங்களாக மாறிக் கண்ணாடி அலமாரிகளுக்குள்ளும் ஃபிரேம் செய்யப்பட்ட சட்டங்களுக்குள்ளும் கம்பீரமாக வீற்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நேரு சாவித்ரி யுனிக் மியூசியத்தில். கான்கிரீட் கட்டிடங்களின் ஆக்கிரமிப்பில் தன் இயல்பை இழந்துவரும் ஏலகிரி மலையின் நிலாவூரில் அமைந்திருக்கிறது சாவித்ரியின் வீடு. சுவரில் பெயர் இருந்தாலும் பார்வையாளர்கள் எளிதில் நுழையத் தயங்க வைக்கிறது இரும்பு கேட். மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் இருப்பது தயக்கத்தை மேலும் கூட்டுகிறது. தயக்கத்தை உதறிவிட்டு. கேட்டைத் தட்டினால் இரண்டு நாய்களின் ஆக்ரோஷக் குரல்கள். பொறுமை காத்து நின்றால், சில நிமிடங்களுக்குப் பிறகு வயதான பெண்மணி ஒருவர் வரவேற்று, அழைத்துச் சென்றார்.

காகிதக் கூழால் செய்யப்பட்ட நவகிரகங்கள், முன்பக்கம் ஆணின் உருவமும் பின்பக்கம் பெண்ணின் உருவமும் கொண்ட சிலை, பழங்காலக் கூஜா, சிறிய நாற்காலிகள், பொம்மைகள் என்று அட்டகாசமாக இருந்தது அந்த அறை. அறிமுகத்துக்குப் பிறகு பேச ஆரம்பித்தார் சாவித்ரி நேரு.

“மியான்மரில் வசதியாக வாழ்ந்த குடும்பம். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்தார் என் அப்பா. என் அக்கா ராஜாமணி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். படிப்பும் தேசப்பற்றும் மிகுந்த குடும்பம். நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது, வட இந்திய ரயில்வேயில் பணியாற்றிய நேரு பெண் கேட்டு வந்தார். இருவருக்கும் பழங்காலப் பொருட்களைச் சேகரிக்கும் ஆர்வம். டெல்லியில் வாழ்க்கையை ஆரம்பித்தோம். என் வாழ்க்கையின் மிகச் சிறந்த முடிவு நேருவைத் திருமணம் செய்துகொண்டதுதான். சின்னக் குழந்தைகள் சோடா மூடிகளையும் தீப்பெட்டி அட்டைகளையும் சேகரிப்பது போலத்தான் நேருவும் சேமித்தார். வளர்ந்த பிறகு மற்றவர்கள் இந்த விஷயங்களை விட்டுவிடுவார்கள். ஆனால் நேரு அதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார். இப்படித்தான் நாங்கள் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் குடியிருந்தோம். 2001-ம் ஆண்டு ஏலகிரிக்கு வந்தோம்” என்கிறார் சாவித்ரி.

சில புகழ்பெற்ற சிலைகள் மற்றும் பொருட்களின் மினியேச்சர்களைச் செய்துவைத்திருக்கிறார்கள்.உலகத் தலைவர்களின் சிலைகள், பழங்காலப் பொருட்கள், தபால் தலைகள், அரிய பொருட்கள் என ஏராளமான பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இருக்கும் இந்திய நாணயங்கள், உலக நாடுகளின் நாணயங்கள், கரன்ஸிகள் எல்லாம் குறிப்புகளுடன் காணப்படுகின்றன. இந்த நாணயங்களும் கரன்ஸிகளும் மதிப்பு மிக்கவை.

“நாணயங்களைச் சேகரிப்பதற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறோம். காலை ஏழு மணிக்குச் சென்றால் இரவுவரை கழுத்து வலிக்க வலிக்க நாணயங்களைத் தேர்ந்தெடுப்போம். ஒருமுறை யாளி படம் போட்டு அச்சடிக்கப்பட்ட ரூபாய், பன்றி போல இருப்பதாகச் சொல்லிச் சிலர் எதிர்ப்பு காட்டினார்கள். நாடாளுமன்றம் படம் போட்டு அச்சடித்த ரூபாய் நோட்டுகளில் தேசியக் கொடியை மறந்துவிட்டார்கள். இப்படி இங்குள்ள ஒவ்வொரு நாணயத்துக்கும் கரன்ஸிக்கும் சுவாரசியமான கதைகள் இருக்கின்றன’’ என்கிறார் சாவித்ரி.

நேருவின் அழகான கையெழுத்தில் ஒவ்வொன்றைப் பற்றியுமான குறிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சினிமா, நாடகம், பத்திரிகைகள், சுதந்திரப் போராட்டம், கடல்வாழ் உயிரினங்கள், விளையாட்டுகள் போன்றவை குறித்த படங்களும் செய்திகளுமாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சார்ட்கள் இங்கே உள்ளன. அனைத்தையும் காட்சிக்கு வைக்க போதிய இடம் இல்லாததால், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

“சீட்டு விளையாடுபவர்கள்கூடச் சீட்டின் பின்பக்கத்தைப் பார்க்க மாட்டார்கள். இந்தச் சீட்டுக் கட்டுகளின் பின்புற டிசைனை டெக்ஸ்டைல் உரிமையாளர் ஒருவர் துணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக வாங்கிச் சென்றார்’’ என்று ஒவ்வொன்றையும் காட்டுகிறார் சாவித்ரி.

பழங்கால டைப்ரைட்டர் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலி பெட்டிகள், ராட்சச பாட்டில்கள் என்று பிரமிப்பு விலகாமல் நின்றுகொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

“வெளிநாடுகளில் எல்லாம் பழங்காலப் பொருட்கள் சேமிப்புக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதிக விலைக்கு ஏலம் போகிறது. முக்கியமாக இப்படிச் சேகரிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் நம் நாட்டில் அந்த அளவுக்கு ஆதரவும் கிடைப்பதில்லை, ஆர்வமும் இருப்பதில்லை. படிப்பு, வேலை என்று மட்டும் வாழ்க்கையை ஒரு சிறு வட்டத்துக்குள் குறுக்கிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வைத்துக்கொண்டால், வாழ்க்கை கூடுதலாக ருசிக்கும்’’ என்ற சாவித்ரி, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்!

84 வயது வரை இந்த மியூசியத்தைக் கட்டிக் காத்த ஆர்.கே நேரு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார். தனியாக மியூசியத்தைப் பாதுகாத்து வருகிறார் 74 வயது சாவித்ரி. பராமரிப்புச் செலவு, உதவியாளருக்குச் சம்பளம் என்று அனைத்தையும் சாவித்ரியே பார்த்துக்கொள்கிறார். மியூசியத்தைப் பார்வையிட வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. பள்ளி, கல்லூரி, அறிவியல் கண்காட்சிகள் போன்றவற்றுக்குச் சார்ட்களை இலவசமாக வழங்குகிறார்.

தனக்குப் பிறகு இந்த மியூசியத்தை, இதன் மதிப்பு உணர்ந்த, சேவை மனப்பான்மை மிக்க ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார் சாவித்ரி. நேரு, சாவித்ரியின் வாழ்நாள் உழைப்பாலும் வருமானத்தாலும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும் இந்த மியூசியத்தை ஏற்று நடத்தக்கூடியவர்கள் விரைவில் கிடைக்கவேண்டும் என்பதே சாவித்ரி அம்மாவுக்கு மட்டுமில்லை, நம் கவலையாகவும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x