Last Updated : 01 Mar, 2016 12:02 PM

 

Published : 01 Mar 2016 12:02 PM
Last Updated : 01 Mar 2016 12:02 PM

கதை சொல்லும் பாடம் - 6: விடை இல்லாத கேள்விகள்

சாமி ஒரு பிச்சைக்காரன். அவனுக்கு இரண்டு கண்களும் தெரியாது. கடைத் தெருவில் ஒரு மரத்தடியில் அமந்து பிச்சை எடுப்பான். ஒரு மூதாட்டி தினமும் காலையில் அவனைக் கொண்டுவந்து விட்டு, மாலையில் கூட்டிக்கொண்டு செல்வார். கடைத்தெருவில் ரிப்பன் கடைக்காரரும் இதர ஓரிரு கடைக்காரர்களும் சாமியிடம் அவ்வப்போது பேசுவார்கள்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த ஒரு நாளில்தான் அந்த நாய் சாமிக்கு அறிமுகமாயிற்று. நாய், சாமி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வந்தது. சாமியின் கையை நக்கியது. சாமி அந்த நாய்க்கு சாப்பாடு கொடுத்தான். நாய் சாப்பிட்டுவிட்டு அவன் காலடியிலேயே படுத்துக்கொண்டது.

அதன் பிறகு நாய் ஊரையெல்லாம் சுற்றிவிட்டுச் சாப்பாட்டு நேரத்தில் சாமி யிடம் வரும். அவனும் அதற்குச் சாப்பாடு கொடுப்பான். இப்படியே சாமியோடு அது மிகவும் நெருங்கிவிட்டது.

சாமியைத் தாண்டிச் செல்பவர்களில் சிலர் அவனுடைய தட்டில் காசு போட்டுவிட்டுச் செல்வதை அந்த நாய் பார்த்துக்கொண்டிருந்தது. சில நாட்கள் கழித்து நாய் ஒரு வேலை செய்ய ஆரம்பித்தது. யாராவது சில்லறை போடாமல் கடந்து சென்றால் அவரைப் பின்தொடர்ந்து போய் அவரது ஆடையைக் கடித்து இழுக்கும். அவர் ஏதாவது சில்லறை போடும்வரை சும்மா விடாது.

நாய் வந்த பிறகு சாமியின் வருமானம் கூடிவிட்டது. சாமி மிகவும் சந்தோஷமாக இருந்தான். நாய்க்கு வேளாவேளைக்குச் சாப்பாடு கொடுத்து அன்பாகப் பார்த்துக்கொண்டான்.

திடீரென்று ஒரு நாள் அந்தச் செய்தி வந்தது. சாமியைக் கூட்டிவரும் மூதாட்டி இறந்துவிட்டார். இனி யார் தன்னைக் கூட்டிக்கொண்டு வருவார் என்று சாமி கவலைப்பட்டான். இதைக் கண்ட ரிப்பன் கடைக்காரர் ஒரு நீளமான கயிறை எடுத்துக்கொண்டு வந்தார். நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டிய அவர், மறு முனையைச் சாமியிடம் கொடுத்தார். நாய் சாமியின் வழிகாட்டியாயிற்று. ஒரு கையில் குச்சி, மறு கையில் கயிறு என்று சாமி நடமாட ஆரம்பித்தான்.

சாமி ஓரிடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுக்காமல் நாயின் உதவியுடன் தெருத்தெருவாகப் போக ஆரம்பித்தான். கூட்டம் நிரம்பிய இடங்களுக்குப் போய்ப் பிச்சை எடுத்தான். பணம் வர வர அவனுக்குப் பேராசை அதிகரித்தது. நாயை விரட்டு விரட்டு என்று விரட்டினான். நாய் களைத்துப்போய் உட்கார்ந்தபோது அதை எட்டி உதைத்தான். நாய் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. ஓட முடியாமல் சோர்ந்தபோது அடி வாங்கிக்கொண்டிருந்தது. சாமியை விட்டுவிட்டு அது எங்கும் போக முடியவில்லை. எப்போதும் அந்தக் கயிற்றை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தான் சாமி. தூங்கும்போது கயிற்றைக் கையோடு சேர்த்துக் கட்டிக்கொள்வான்.

நாய் படும் பாட்டைக் கண்ட வியாபாரிகள் அந்த நாயை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

ஒருநாள் நாய் தெருவில் ஒரு எலும்புத் துண்டைப் பார்த்தது. அதை எடுக்கத் தாவியது. ஆனால் சாமியின் கையில் இருந்த கயிறை விட்டுப் போக முடியவில்லை. நாய் திமிறியது. ஆனால் சாமி விடவில்லை. ஒரு உதை விட்டான். பிறகு தன் விருப்பப்படி அதை இழுத்துச் சென்றான்.

இதைப் பார்த்த ரிப்பன் கடைக்காரர் கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து அந்தக் கயிறைத் துண்டித்தார். விடுதலை பெற்ற நாய் பாய்ந்து எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிவிட்டது.

சாமி வெலவெலத்துப்போனான்.நாயைத் தேடி அலைந்து அது கிடைக்காமல் தட்டுத் தடுமாறி, தான் தங்கியிருந்த இடத்துக்குப் போனான்.

அடுத்த சில நாட்கள் அவன் கடைத் தெருவுக்கு வரவில்லை. அந்த நாயும் வரவில்லை. மரத்தடி காலியாகக் கிடந்ததைப் பார்த்த ரிப்பன் கடைக்காரர், “அந்த நாய் இப்போது சுதந்திரமாக சுற்றிக்கொண்டு சந்தோஷமாக இருக்கும்” என்றார். அவர் பேசி வாய் மூடுவதற்குள் ‘டக் டக்’ என்னும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள். குச்சியைத் தட்டியபடி சாமி நடந்து வந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் அந்த நாய் வந்துகொண்டிருந்தது.

ரிப்பன் கடைக்காரர் ஆச்சரியத்துடன் அவன் அருகில் சென்றார். “இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டார்.

“இந்த நாய் ஓடிப்போய்விட்டது. நான் மூலையிலேயே படுத்துக் கிடந்தேன். கையில் பணமே இல்லை. இன்னும் இரண்டு நாள் இருந்தால் நான் செத்துப்போயிருப்பேன். ஆனால் இந்த நாய் திரும்ப வந்துவிட்டது. நேற்று நான் தூங்கிக்கொண்டிருந்தபோது வந்து என் முகத்தை நக்கியது. அதைக் கொல்ல வேண்டும்போல ஆத்திரம் வந்தது. ஓங்கி ஒரு உதை விட்டேன். ஆனால், பாவமாக இருந்தது. மன்னித்துவிட்டேன்” என்று சொன்ன சாமி, தன் கையை உயர்த்திக் காட்டினான். இரும்புச் சங்கிலியில் நாயைப் பிணைத்திருந்தான்.

சாமி தன் குச்சியைத் தட்டியபடி நடக்க ஆரம்பித்தான். நாய் அவனுக்கு முன்னே நடக்க ஆரம்பித்தது.

ஆர்.கே.நாராயண் (1906 - 2001) எழுதிய இந்தக் கதைக்குத் தலைப்பு ‘The Blind Dog’. தலைப்பை நன்றாகக் கவனியுங்கள். The Blind Begger அல்ல. The Blind Dog. பிச்சை எடுக்கும் சாமிக்குத்தான் கண் தெரியாது. ஆனால், கதாசிரியரோ நாய்க்குக் கண் தெரியாது என்கிறார். அதுவும் தலைப்பில்.

கூடுதலாக வருமானம் கிடைக்க உதவி செய்த அந்த நாயைப் பிச்சைக்காரன் அன்பாக நடத்தவில்லை. அதன் உணர்வுகளை, வலியை பொருட்படுத்தவே இல்லை. நாயை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும் இல்லை.

நாய் இல்லாதபோது அவன் படாதபாடு பட்டான். நாயின் அருமை அப்போதாவது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், தெரியவில்லை. நாயின் மீது அவனுக்குக் கோபமே இருந்தது.

பிறரது அனுதாபத்தின் மூலமாகவே வாழ்ந்துவரும் சாமிக்கு ஏன் அந்த நாயின் மீது அனுதாபம் பிறக்கவில்லை?

நாய் ஏன் விடுதலையை விரும்பவில்லை? அடிமை வாழ்வில் அந்த நாய் சுகம் கண்டுவிட்டதா? அல்லது சாமியை விட்டுப் பிரிந்த பிறகு அந்த நாய்க்கு ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்கவில்லையா? அல்லது தன்னை நம்பியிருக்கும் ஒரு மனிதனை நிர்க்கதியாக விட்டுச் செல்ல அதற்கு மனமில்லையா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் கதையில் இல்லை. நம்மால் யூகங்கள் மட்டுமே செய்ய முடியும்.

மனிதன் நாய் என்பதற்குப் பதிலாக, இரண்டு மனிதர்களுக்கிடையில் நாம் காணக்கூடிய உறவை எடுத்துக்கொண்டு இதை யோசித்துப் பார்க்கலாம். சில விதமான உறவுகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. இவ்வளவு கஷ்டப்பட்டும் ஏன் இவர் அவருடன் நட்பாக / நெருக்கமாக இருக்க வேண்டும்? விடுபட்டுச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் இவர் ஏன் அவரை விட்டுப் பிரியாமல் இருக்கிறார் என்றெல்லாம் பல கேள்விகள் நமக்கு எழுந்திருக்கும். நமது வாழ்விலேயே சில விஷயங்கள் இப்படி நடந்திருக்கலாம். தேவையில்லை எனத் தெரிந்தும், நல்லதல்ல எனத் தெரிந்தும், வேதனைகள் பல இருந்தும் நம்மால் சிலரை விட்டு விலக முடியவில்லை. சில விஷயங்களைத் துறக்க முடியவில்லை.

சாமியும் நாயும் ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற விசித்திரமான சம்பவங்கள், உறவுகளை நம் வாழ்வில் காணும்போது நாம் அவற்றை ஆழமாக அணுகிப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். அப்படிப்பட்ட அசலலுக்கு இந்தக் கதை வழிவகுக்கும்.

- தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x