Published : 26 Jun 2018 11:49 AM
Last Updated : 26 Jun 2018 11:49 AM

‘டமில்’னு சொல்லாதீங்க...

என்னதான் ‘தாய்மொழி தாய்மொழி’ என்று பேசினாலும், நடைமுறை வாழ்க்கையில் ஆங்கிலம் மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. ஒரு கூடுதல் தகுதியாகிவிட்டது. அந்தத் தகுதி இன்று எத்தனை தமிழக மாணவர்களிடம் இருக்கிறது என்று பார்த்தால், மிகவும் சொற்பமே! இதனால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் படிப்பு, ஐ.டி.வேலை என எல்லாத் தளங்களிலும் பெரும்பாலான மாணவர்களால் வெற்றிநடை போட முடிவதில்லை.

அந்தக் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வதற்குச் சிலர், ஆங்கிலம் சொல்லித் தரும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், எல்லோராலும் அது முடியுமா?

ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தும், போதுமான பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கென்றே, ‘இங்கிலீஷ் ஆக்சஸ் மைக்ரோ ஸ்காலர்ஷிப் புரோகிராம்’ என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம்.

படிப்பு பாதிக்காமல் பயிற்சி

“அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களின் தொடர்புகொள்ளும் திறனை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சியில் மொழிப் பாடங்கள் மட்டுமல்லாது, குழுச் செயல்பாடு, தலைமைப் பண்புகள், மகளிர் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை போன்ற பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் இளம் தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லாரென் லவ்லேஸ்.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தின் மூலமாக, 2004-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இயங்கும் தொண்டு நிறுவனங்களில் தகுதியானவற்றைத் தேர்வுசெய்து, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அடிப்படையான ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அந்தத் தொண்டு நிறுவனங்கள் இயங்கும் பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஆர்வமுள்ள மாணவர்கள் பட்டியலிடப்படுவார்கள். தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு ‘ஆக்சஸ்’ பயிற்சி வழங்கப்படுகிறது. 13 வயது முதல் 23 வயது வரையிலான மாணவர்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தப் பயிற்சிகள் பள்ளி, கல்லூரி நேரம் முடிந்த பிறகு நடத்தப்படுவதால், படிப்பு பாதிக்குமே என்ற கவலையும் இல்லை.

இரண்டாண்டில் தலைவர்கள்

இந்தப் பயிற்சியை முடித்த மாணவர்கள் சிலருக்கு, சமீபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் சிலர், தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய அதிபன் எனும் மாணவர், “இந்தத் திட்டத்துல ஆங்கிலம் ஓரளவு தெரிஞ்சவங்க, அடிப்படையான ஆங்கிலம் மட்டும் தெரிஞ்சவங்கன்னு யாரு வேணும்னாலும் சேரலாம். இரண்டு வருஷம் முடியறப்போ, நூறு பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேசுற அளவுக்கு வளர்ந்துடுவாங்க. ஆங்கிலத்துல பேசுற தைரியத்தை மட்டுமில்லாம, மேடையில கூச்சம், பயம் எதுவுமில்லாமப் பேசுற தன்னம்பிக்கையையும் எனக்கு இந்தத் திட்டம்தான் கொடுத்துச்சு. இந்தப் பயிற்சியை முடிச்சதால, ‘கல்சுரல் எக்ஸ்சேஞ்ச்’ மூலமா, அமெரிக்கா போறதுக்கும் எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்பவர், முக்கியமான ஒரு கருத்தையும் சேர்த்துக் கூறினார்.

“பொதுவா, அயல்நாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கும்போது, ‘தமிழ்’னு நல்லா உச்சரிக்கிறாங்க. ஆனா, நம்மில் பலர் இங்கிலீஷ் நல்லா பேச வரும்னு சொல்லிட்டு, ஃபேன்ஸியா இருக்கணுங்கிறதுக்காக ‘தமிழை’, ‘டமில்’னு உச்சரிக்கிறாங்க. ஆங்கிலம் கத்துக்கிட்டோம்கிறதுக்காகத் தாய்மொழியைக் கைவிடாதீங்க!” என்றார்.

சரிதானே!

சென்னை டூ நாசா!

இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாகச் சேர்ந்திருக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள பல்வேறு மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் செல்லத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எட்டு மாணவர்கள் கலந்துரையாடினர்.

இதுகுறித்து ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் (கிழக்கு)’ அமைப்பைச் சேர்ந்த நாகலக்ஷ்மி கூறும்போது, “எங்க அமைப்புல ‘விங்ஸ் டு ஃபிளை’ன்னு ஒரு திட்டம் இருக்கு. அந்தத் திட்டம் மூலமா, சென்னை மாநகராட்சிப் பள்ளியில படிக்கிற மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமா ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி நடத்துறோம். பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு வெற்றி பெறும் 8 மாணவர்களுக்குக் கலாச்சார, கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமா வெளிநாடுகளுக்குக் கூட்டிப் போவோம். முதல் வருஷம் மலேசியாவுக்கும், இரண்டாவது வருஷம் ஜெர்மனிக்கும் மாணவர்களைக் கூட்டிட்டுப் போனோம். இந்த வருஷம் நாசாவுக்கு மாணவர்களை 10 நாட்கள் கூட்டிட்டுப் போறோம். ஜூலை 4-ம் தேதி அவங்க அமெரிக்காவுக்குப் புறப்படுறாங்க” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x