

கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட முசரபானி, 2017-ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசரபானி, 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துளளார். முசரபானி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களான சிபிஎல், ஐஎல்டி20, பிஎஸ்எல், இங்கிலாந்தின் விட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றின் மூலம் நிரூபித்துள்ளார்.
முசரபானி ஐபிஎல் அணியுடன் இணைவது இது 2-வது முறையாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முசரபானி வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியுடன் இணைய உள்ளார்.