Published : 23 May 2023 11:51 PM
Last Updated : 23 May 2023 11:51 PM

"இப்போது கோலியை விட ஷுப்மன் கில் பற்றியே பேச வேண்டும்" - சுனில் கவாஸ்கர்

டெல்லி: "எதிர்காலத்தைப் பார்க்க வேண்டிய நேரம் இது, அந்த எதிர்காலம் ஷுப்மன் கில்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

குஜராத் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் சின்னசாமி மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறியது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்தது.

இந்த நிலையில் பெங்களூரு அணியின் தோல்விக்கு குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஷுப்மன் கில் முக்கிய காரணம். முன்னதாக, அதே போட்டியில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்திருப்பார். ஆனால், ஷுப்மன் கில்லின் அசத்தலான ஆட்டத்தால் குஜராத் எளிதாக பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தப் போட்டி குறித்தும், விராட் கோலியின் எதிர்காலம் குறித்தும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "நாம் இப்போது பேச வேண்டியது கோலியை பற்றி அல்ல, ஷுப்மன் கில் குறித்தே பேச வேண்டும். மிக கடினமான சூழலில் கில் சதம் விளாசியிருந்தார். விராட் கோலியின் இன்னிங்ஸைவிட சிறப்பானதொரு இன்னிங்ஸ் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றொரு நிலையில்தான் சதம் அடித்து வென்று கொடுத்தார் கில்.

கோலியின் இன்னிங்ஸ் நம்பமுடியாதது. பவர் ஹிட்டிங் நிறைந்த அவரின் ஆட்டத்தை விட, கில் கம்பீரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மிகவும் நேர்த்தியாக புட் வொர்க் கொஞ்சம்கூட தவறாமல் விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

எனவே, கோலி டி20 அணியில் இடம் பெறத் தகுதியானவரா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, ஷுப்மன் கில் பற்றி அதிகம் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தைப் பார்க்க வேண்டிய நேரம் இது, அந்த எதிர்காலம் ஷுப்மன் கில்" என்று சுனில் கவாஸ்கர் விளக்கமாக பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x