Published : 17 May 2023 08:35 AM
Last Updated : 17 May 2023 08:35 AM

'தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது உணர்ச்சிமிகுந்த தருணம்' - சுனில் கவாஸ்கர் கருத்து

தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்ற சுனில் கவாஸ்கர்

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் சட்டையில் ஆட்டாகிராஃப் வாங்கிய உணர்ச்சிமிகுந்த தருணமாக இருந்தது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் ஆட்டமாக இது அமைந்திருந்ததால் ஆட்டம் முடிவடைந்ததும் தோனி தலைமையில் சிஎஸ்கே வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தோனி மைதானத்தை வலம் வந்தபடி ரசிகர்களுக்கு சில பரிசு பொருட்களையும் வழங்கினார்.

அப்போது போட்டி ஒளிபரப்பாளர்கள் குழுவினருடன் மைதானத்தில் நின்று கொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவானும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், ஒளிப்பதிவாளரிடம் இருந்த மார்க்கர் பேனாவை வாங்கிக்கொண்டு ஓடிச் சென்று தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கினார். இந்திய அணிக்காக மட்டை வீச்சில் பல சாதனைகளை நிகழ்த்திய ஒரு ஜாம்பவான், தோனியிடம் கையெழுத்து வாங்கியது அனைவரையும் நெகிழ வைத்தது. இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

சிஎஸ்கே மற்றும் தோனி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத வகையிலான சிறப்பு தருணத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதனால்தான் ஆட்டோகிராஃப் வாங்க தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன்.ஏனெனில் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி.

எனவே தோனியிடம் சென்று, நான் அணிந்திருந்த சட்டையில் கையெழுத்துப் போடச் சொன்னேன். அதை அவர், ஏற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். ஏனெனில் அவர், இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் சேப்பாக்கத்தில் விளையாடும் வாய்ப்பை தோனி பெறுவார்.

ஆனால் அந்த தருணத்தை (சிஎஸ்கேவின் கடைசி லீக் ஆட்டம்) ஸ்பெஷலாக மாற்ற முடிவுசெய்தேன். கேமரா யூனிட்டில் ஒருவரிடம் மார்க்கர் பேனா இருந்தது எனது அதிர்ஷ்டம். அந்த நபருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x