Last Updated : 16 Sep, 2017 10:13 AM

 

Published : 16 Sep 2017 10:13 AM
Last Updated : 16 Sep 2017 10:13 AM

இந்திய ஒருநாள் போட்டித் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அசத்துவார்கள்: ஆஸ்திரேலிய அணி வீரர் ஆஷ்டன் அகர் கருத்து

இந்திய ஒருநாள் போட்டித் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி, மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நாளை (17-ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஒருநாள் போட்டிகளில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மதிப்புமிக்க சொத்து போன்றவர்கள். ஏனெனில் அவர்களால் இரு வழிகளிலும் பந்துகளை சுழலச் செய்ய முடியும். பொதுவாகவே இதுபோன்ற பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தக்கூடியவர்கள். மேலும் அவர்கள், சிறந்த தாக்குதல் பந்து வீச்சையும் தொடுக்க முடியும். எங்கள் அணியில் உள்ள ஆடம் ஸம்பா மற்றும் இந்திய அணியில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் ரிஸ்ட் ஸ்பின்னர்களாக உள்ளனர்.

இவர்கள் இந்தத் தொடரில் மிகப்பெரிய பங்கு வகிப்பார்கள். பந்துகளை சுழலச் செய்வதற்கு இவர்களுக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் தேவையில்லை. அனைவருமே புத்திசாலிகள். குறிப்பாக ஆடம் ஸம்பா சாய்வாக வீசுவது, கூக்ளி என பந்து வீச்சில் அதிக வித்தியாசங்களை கையாளக்கூடியவர். இவற்றை எந்தநேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர். இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

தற்போதைய நிலையில் எங்கள் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஸம்பா தான் உள்ளார். ஐபிஎல் மற்றும் இதற்கு முந்தைய தொடர்களில் அவர் சிறப்பாக பந்து வீசி உள்ளார். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நாங்கள் இருவரும் விளையாடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. கடந்த இரு வருடங்களாக நான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் எனது தன்னம்பிக்கை உயர்வாகவே உள்ளது. இந்தக் காலகட்டத்தில் நான் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளேன்.

ஷிகர் தவண் விலகி உள்ளது எங்களுக்கு சாதகமான விஷயம். தவண் சிறந்த பார்மில் இருந்தார் என்றே நினைக்கிறேன். அவர் விளையாடாதது நிச்சயம் எங்களுக்கு சாதகமான அம்சம்தான். ஆனால் அவருக்காக வேண்டிக்கொள்கிறேன். பந்தை ஸ்விங் செய்யும் போது வலது - இடது கை பேட்டிங் கூட்டணியை கையாள்வது கடினம் தான். அந்த வகையில் இது எங்களுக்கு சாதகமே.

இவ்வாறு ஆஷ்டன் அகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x