Published : 30 Apr 2023 07:22 AM
Last Updated : 30 Apr 2023 07:22 AM
கோண்டா: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக அவர்கள், டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதில் ஒன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் உள்ளது.
காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்துள்ள போதிலும் மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியில் இருந்து விலகவேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் முற்றிலும் நிரபராதி. உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த வகையான விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் பதவி விலகுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் இப்போது நான் பதவி விலகினால் அவர்களின் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டது போலாகி விடும்.
இந்த சர்ச்சையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில்ஒரு தொழிலதிபருக்கும், காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவர்கள் என் மீது அதிருப்தியில் உள்ளனர். எனக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் வீராங்கனைகள் இன்னும் தர்ணாவில் அமர்ந்துள்ளனர். அவர்கள் ஏன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக தொடர்ந்து பேசுகிறார்கள்?,
விசாரணை அறிக்கை வெளியாகும் வரை காத்திருக்காமல், உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, புதிய குற்றச்சாட்டை முன்வைத்து, மல்யுத்த விளையாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
12 ஆண்டுகளாக வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அவர்கள் ஏன் காவல் நிலையத்திலோ, மல்யுத்த கூட்டமைப்பிலோ அல்லது அரசாங்கத்திலோ புகார் கொடுக்கவில்லை. அவர்கள் நேராக ஜந்தர் மந்தருக்குச் சென்றுள்ளனர். விசாரணைக் குழுவிடம் ஒரு ஆடியோ பதிவை சமர்ப்பித்துள்ளேன். அதில், ஒரு நபர் என்னை சிக்க வைக்க ஒரு பெண்ணை ஏற்பாடு செய்வது பற்றி பேசுவது இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT