Published : 16 Sep 2017 10:13 AM
Last Updated : 16 Sep 2017 10:13 AM

தீவிரமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்: இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரில் வார்த்தை மோதல்கள் அதிகம் நடைபெற்றது. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிஆர்எஸ் விவகாரத்தில் களத்தில் இருந்தபடி அணி நிர்வாகிகளிடம் உதவி கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆஸ்திரேலிய அணி நல்லுணர்வுடன் விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் பின்னர் இரு நாட்டு வாரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக கடந்த 10-ம் தேதியே ஆஸ்திரேலிய சென்னை வந்து சேர்ந்தது. அப்போது கேப்டன் ஸ்மித் கூறும்போது, “ஒருநாள் போட்டித் தொடரை நல்லுணர்வுடன் விளையாடுவோம் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே கடினமான சவால்கள் இருக்கவே செய்யும். நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்நிலையில் இது குறித்து நேற்று நடைபெற்ற பத்ரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ட போது, “போட்டி தொடங்கும் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் நாங்கள் போட்டியை நல்லுணர்வுடன் விளையாடுவோம். இரு அணிகளுமே இயற்கையாகவே ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவை. ஆனால் நாங்கள் விளையாட்டின் நல்லுணர்வை எப்போதும் மனதிலேயே வைத்துள்ளோம். தொழில்முறை கிரிக்கெட் வீரர்களான நாங்கள், எங்களுடைய எல்லையை கடக்கக்கூடாது என்பது தெரியும். எப்போதுமே எங்களது இடத்தில் தான் நாங்கள் இருந்து கொள்ள வேண்டும். தீவிரமான கிரிக்கெட்டை விளையாட நாங்கள் விரும்புகிறோம்” என்றார். - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x