Published : 14 Sep 2017 04:16 PM
Last Updated : 14 Sep 2017 04:16 PM

ஹர்ஷா போக்ளே கிண்டலுக்குப் பதில்: உலக லெவன் அணிக்கு த்ரில் வெற்றி

லாகூரில் நடைபெற்ற 2-வது டி20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக லெவன் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய உலக லெவன் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹஷிம் ஆம்லா 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தும் திசர பெரேரா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 35 பந்துகளில் 69 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் சொஹைல் கான் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்சர்களை அடித்த பெரேரா, கடைசி ஓவரில் கடைசி பந்துக்கு முதல் பந்தில் நேராக வானுயர சிக்சரில் வெற்றி ரன்களை எடுத்தார்.

மிகவும் உறுதியுடன் ஆடிய ஆம்லா தனது 7-வது டி20 அரைசதத்தை எடுத்தார். 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் இதில் அடங்கும், திசர பெரேரா 5 சிக்சர்களை விளாசினார். கடைசியில் ஷோயப் மாலிக், பெரேராவுக்கு அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் ஹர்ஷா போக்ளே கிண்டல் உறுதி பெற்றிருக்கும்.

முன்னதாக தமிம் இக்பால் (23), டிம் பெய்ன் (10) டுபிளெசிஸ் (20) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

இதற்கும் முன்னதாக பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பாபர் ஆஸம் (45), அகமட் ஷெசாத் (43), ஷோயப் மாலிக் (39), ஆகியோர் அருமையாக ஆடினர். பிட்ச்சில் பந்துகள் மெதுவாகவும் தாழ்வாகவும் வந்ததால் ரன் குவிப்பு கடினமாக அமைந்தது. 5-வது ஓவரில் ஃபகார் ஜமான் 21 ரன்களில் வெளியேறினார்.

ஷெசாத், ஆஸம் ஆகியோர் 2-வது விக்கெட்டுக்காக 59 ரன்களைச் சேர்த்தனர். ஷோயப் மாலிக் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை அடித்து கடைசி பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.

ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். உமர் அக்மல் 88 போட்டிகளில் 1690 ரன்கள் எடுக்க இதே 88 போட்டிகளில் ஷோயப் மாலிக் 1892 ரன்களை எடுத்து அவரைக் கடந்தார். பெரேரா பந்து வீச்சிலும் அசத்தி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மே.இ.தீவுகள் ஸ்பின்னர் பத்ரீ 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆல்ரவுண்ட் ஆட்டத்துக்காக பெரேரா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x