Published : 08 Mar 2023 06:31 PM
Last Updated : 08 Mar 2023 06:31 PM

“ரவி சாஸ்திரி... நீங்கள் வெளியில் இருப்பவர், உங்கள் கருத்து தேவையற்றதே” - ரோகித் சர்மா காட்டம்

இந்தூர் டெஸ்ட்டில் தோல்வி அடைந்தது குறித்து ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “குழிப் பிட்ச் நமக்கு எதிராக திரும்பும் தன்மை கொண்டது என்று கூறுவதற்குப் பதிலாக, இந்திய அணியினரின் மிகை நம்பிக்கை, நம்மதான் வெற்றி பெறுவோம் என்ற ஒருவகையான உத்தரவாத மனநிலை, ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆர்வம் ஆகியவையே தோல்விக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ரவி சாஸ்திரியின் இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் ரோகித் சர்மா மறுத்துள்ளார்.

ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் 7 ஆண்டுகள் இருந்திருக்கின்றார். ஓய்வறையில் வீரர்கள், கேப்டன், சக பயிற்சியாளர்களின் மனநிலை இதையெல்லாம் ரவி சாஸ்திரி நன்கு அறிந்தவர்தான். ஆனால், அவரை சட்டென ரோகித் சர்மா, ‘வெளியில் இருப்பவர்கள் இப்படி மிகை நம்பிக்கை என்று கூறுவதெல்லாம் குப்பைத்தனமான வாதம்’ என்று ஒரே அடி அடித்துள்ளார்.

ரோஹித் சர்மா கூறியதை முதலில் பார்ப்போம்: “2 போட்டிகளில் வென்ற பிறகே வெளியிலிருப்பவர்கள் நாங்கள் ஏதோ மிகை நம்பிக்கையில் ஆடுகிறோம் என்று கூறுவது உண்மையில் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டிய கருத்தே. 4 போட்டிகளிலும் சிறப்பாக ஆட முயற்சிக்கின்றோம். இது மிகை நம்பிக்கை என்றால் அது முற்றிலும் முழுக்க ஒதுக்கப்பட வேண்டிய கருத்து. 2 போட்டிகளில் வென்றதோடு நிறுத்த விரும்பவில்லை இதுதான் என் பதில்.

குறிப்பாக வெளியில் அமர்ந்திருக்கும் இது போன்ற ஆட்கள் மிகை நம்பிக்கை என்றெல்லாம் கூறுவது வாடிக்கைதான். ஆனால் ஓய்வறையில் அவர்கள் இல்லை. இங்கு என்ன மாதிரியான பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் அறியார். கருணயற்ற என்ற வார்த்தைதான் இங்கு எங்களிடையே புழங்கிக் கொண்டிருக்கின்றது. எதிரணியினருக்கு ஒரு இஞ்ச் கூட இடம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் எங்களது பேச்சு, செயல் அனைத்தும்.

நாங்கள் வெளிநாடுகளில் ஆடும்போது இதே போன்றுதான் அவர்களும் ஆடுகின்றார்கள். கருணையற்ற விதத்தில்தான் அவர்களும் ஆடுவார்கள் நாங்களும் ஆடுகின்றோம். நாங்கள் வெளிநாடுகளில் ஆடும்போது எதிரணியினர் எங்களுக்கு ஒரு இஞ்ச் கூட இடம் தர மாட்டார்கள். ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்ப மாட்டார்கள், அதே போல்தான் நாமும்.

அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே எங்கள் முடிவு. இது வெளியில் இருப்பவர்களுக்கு மிகை நம்பிக்கை, திமிர் என்பது போல் தெரிந்தால் எங்களுக்கு அவர்கள் கருத்தின் மீது எந்த வித முக்கியத்துவமும் இல்லை. ரவி சாஸ்திரியே ஓய்வறையில் இருந்திருக்கிறார். நாங்கள் ஆடும்போது என்ன மாதிரியான மன நிலையில் ஆடுகின்றோம் என்பதை ரவி சாஸ்திரி நன்கு அறிவார். கருணையற்ற விதத்தில் ஆடுவது ‘மிகை நம்பிக்கை’ ஆகாது” என்று ரோகித் சர்மா காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆனால், இருவருமே பிட்ச் பற்றி வாயைத்திறப்பதில்லை, அது ஏதோ தடை உத்தரவு போல் தெரிகின்றது. இப்படி இரண்டரை நாள் ஆட்ட பிட்செல்லாம் போட்டால் அது இந்திய அணிக்கும் எதிராகத் திரும்பும் என்பதுதான் தாத்பரியம். அதைப்பற்றி பேசாமல் ரவி சாஸ்திரி மிகை நம்பிக்கை என்று கூறுவதும், இவர் அதை மறுத்து ’கருணையற்று ஆடுகிறோம்’ என்று கூறுவதும் என்ன மாதிரியான ஒரு வாத எதிர்வாதம் என்றுதான் புரிவதில்லை.

முதலில் இந்திய அணி மிகை நம்பிக்கையில் ஆடியது என்று கூறுவது ரவி சாஸ்திரிக்கே அடுக்குமா? முதலில் நம்பிக்கை என்று ஒன்று இருந்திருந்தால், ஆஸ்திரேலியாவில் கோலி இல்லாமல் ஒரு கட்டத்தில் பும்ரா இல்லாமல், அஸ்வின் இல்லாமல் அங்கு ரஹானே தொடரை வென்றாரே? அந்த நம்பிக்கை இருக்கின்றதா என்றுதானே ரோகித் சர்மாவிடம் கேட்டிருக்க வேண்டும். சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவில் போய் 2 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய 2வது அணி இந்திய அணி என்ற பெருமை ஒருபுறம் இருக்க, அந்தப் பிட்ச்களில் வெல்ல முடிந்த அணி இங்கு வந்து ஸ்பின் பிட்ச் என்று கதையடித்துக் கொண்டு மண் பெயர்ந்து வரும் பிட்ச்களைப் போட்டு விட்டு ‘கருணையற்று’ ஆடுகின்றோம் இவர் கூறுவதும், அவர் மிகை நம்பிக்கை என்று கூறுவதும் என்ன கிரிக்கெட் பார்வை என்பதும் நமக்குத் தெளிவாகவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x