Published : 05 Mar 2023 06:01 AM
Last Updated : 05 Mar 2023 06:01 AM

ஆடுகளம் ரிவர்ஸ் ஸ்விங்குக்கு கைகொடுக்க வாய்ப்பு - அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார் மொகமது ஷமி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐ-யின் மருத்துவ ஊழியர்களுடன் கலந்தாலோசித்து, ஐபிஎல் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதுமான ஓய்வு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே இந்தூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மொகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

ஷமி, முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாட உள்ளார். இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு பதிலாகஉமேஷ் யாதவ் களமிறங்கி இருந்தார். பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 4-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மொகமது சிராஜுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஏனெனில் அவர், ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளார். அகமதாபாத் ஆடுகளம் உலர்ந்த நிலையில் காணப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என தெரிகிறது. இதனால் மொகமது ஷமி விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷமி முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் கூட்டாக 30 ஓவர்களுக்கு மேல் வீசி 7 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியஅணி 2-1 என முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால் அகமதாபாத் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

ஆடுகளம் எப்படி?: இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களில் முடிவடைந்தது. இந்த ஆடுகளம் மோசம் என ஐசிசி தெரிவித்துள்ளதுடன் 3 அபராத புள்ளிகளை வழங்கி உள்ளது. இதனால் தற்போது அனைவரது கவனமும் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் மீது திரும்பி உள்ளது.

குஜராத் கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில், ஆடுகள வடிவமைப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வரவில்லை. உள்ளூர் ஆடுகள வடிவமைப்பாளர்களை கொண்டு எப்போதும் போன்ற சாதாரண ஆடுகளத்தையே தயார் செய்துள்ளோம்.

கடந்த ஜனவரி மாதம் இங்கு ரஞ்சி கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் ரயில்வே அணி 508 ரன்கள் குவித்தது. குஜராத் அணி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தாலும் இரு இன்னிங்ஸிலும் 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. இதனால் இந்த முறையும் ஆடுகளத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது” என்றன.

அகமதாபாத் ஆடுகளத்தில் கரோனா காலத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x