Published : 17 Feb 2023 06:19 AM
Last Updated : 17 Feb 2023 06:19 AM
சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி கடந்த 8-ம் தேதி முதல் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன் இறுதி நாளான நேற்று ஆடவருக்கான யு-19 ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் டெல்லி வீரர் பயாஸ்ஜெயின் 13-11, 11-6, 11-7, 8-11,11-4 என்ற செட் கணக்கில் உத்தரபிரதேசத்தின் திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தங்கபதக்கத்துடன் அவருக்கு ரூ.72 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் பிரேயேஷ் ராஜ் 8-11,7-11,11-7,13-15,11-8,11-9,8-11 என்ற செட் கணக்கில் திவ்யான்ஷ் வஸ்தவாவிடம் தோல்வி கண்டார்.
யு-19 ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் வருண் கணேஷ், பிரேயேஷ் ராஜ் ஜோடி 11-7, 11-9, 11-6 என்ற நேர் செட்டில் மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாசார்ஜி, சவுமியாதீப் சர்க்கார் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
அதேவேளையில் யு-17 ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிஆட்டத்தில் தமிழகத்தின் முத்துராஜசேகரன், பிரேயேஷ் ராஜ் ஜோடி 10-12, 9-11, 5-11 என்ற செட்கணக்கில் மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாசார்ஜி, புனித் பிஸ்வாஸ் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம்பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.சத்தியன், எம்.எஸ்.மைதிலி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT