Published : 01 Jan 2023 05:32 AM
Last Updated : 01 Jan 2023 05:32 AM
டேராடூன்: கார் விபத்தில் படுகாயம் அடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் நேற்று முன்தினம் அதிகாலை டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் தனியாக காரில்பயணித்த போது விபத்துக்குள்ளானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்தின் நெற்றியில் இரண்டு இடங்களில் கீறல் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலில் காயமும் முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல்நிலையை எலும்பியல் துறை டாக்டர் கவுரவ் குப்தாகண்காணித்து வருகிறார். உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ரிஷப் பந்துக்கு ஏற்படவில்லை. அவரது உடல் நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தசை நார் காயத்தில் இருந்து ரிஷப் பந்த், முழுமையாக குணமடைய 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. அதேவேளையில் காயத்தின் தன்மை அதிகமாக இருந்தால் குணமடைவதற்கான காலம் மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் வரும் பிப்ரவரி 9-ம்தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்பது சந்தேகம் என கருதப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிகளில் ரிஷப் பந்த் முக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.
ரிஷப் பந்த் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவதற்கு அதிக காலம் ஆகும் என்பதால் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரிலும் அவர், கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த், டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0என கைப்பற்றிய இந்திய அணியில் பந்த் இடம் பெற்றிருந்தார்.ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரைகருத்தில் கொண்டு இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டி தொடர்களில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் பெங்களூரு தேசியகிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிபரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
மது அருந்தி இருந்தாரா ரிஷப் பந்த்?
ஹரித்வார் மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங் கூறும்போது, “உத்தரபிரதேச எல்லையில் இருந்து நர்சனில் விபத்து நடந்த இடம் வரை உள்ள 10 கேமராக்களை நாங்கள் சோதித்தோம், இதில் ரிஷப் பந்த்தின் கார் தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேக வரம்பை கடக்கவில்லை. சாலை தடுப்புகளின் மீது மோதிய பின்னரே காரின் வேகம் அதிகரித்துள்ளது.
ரிஷப் பந்த், மது அருந்தியிருந்தால் எப்படி டெல்லியில் இருந்து 200 கிலோ மீட்டர் வரை எந்த வித விபத்திலும் சிக்காமல் காரில் வந்திருக்க முடியும்? ரூர்க்கி மருத்துவமனையில் முதல் உதவி வழங்கிய மருத்துவர்களும் ரிஷப் பந்த் முற்றிலும் இயல்பாகவே இருந்ததாக கூறினர். தன்னிலை மறக்காமல் இருந்ததால் தான் கார் விபத்தில் சிக்கிய போது அவரை, வெளியே கொண்டுவர முடிந்தது. குடிபோதையில் இருந்தால் காருக்குள் இருந்து யாரையும் வெளியே கொண்டுவர முடியாது” என்றார்.
நலம் விசாரித்த பிரதமர்: கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்து அவரது தாயார் சரோஜ் பந்த்திடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில், ‘மரியாதைக்குரிய பிரதமர் மோடி, ரிஷப் பந்தின் தாயார் மற்றும் குடும்பத்தினரிடம் ரிஷப் பந்த்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பிரதமர் அக்கறையுடன் நலன் விசாரித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில்,“ கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது வேதனை அளிக்கிறது. அவர் ஆரோக்கியத்திற்காகவும், விரைந்து குணம் பெற வேண்டியும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் கவுரவிப்பு: ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியிருந்த போது அவரை, ஹரியாணா போக்குவரத்து கழக ஊழியர்கள் சுசில்குமார், பரம்ஜீத் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஹரித்துவாரில் இருந்து பானிபட்டுக்கு இயக்கப்பட்ட பேருந்தில் பணியில் இருந்தனர். சாலையில் கார் விபத்தில் சிக்கியதை பார்த்த சுசில்குமாரும், பரம்ஜீத்தும் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவந்து சரியான நேரத்தில் ரிஷப் பந்த்தை மீட்டனர். இந்நிலையில் இவர்களின் மனிதநேயத்தை பாராட்டி பானிபட் பணிமனை சார்பில் பாராட்டு கடிதமும், கேடயமும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT