Published : 30 Dec 2022 06:19 AM
Last Updated : 30 Dec 2022 06:19 AM
டெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிரதோஷ் ரஞ்ஜன் பால் சதம் விளாசி அசத்தினார்.
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தில் 54 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 25, நாராயண் ஜெகதீசன் 34, பாபா அபராஜித் 57, பாபா இந்திரஜித் 71, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
விஜய் சங்கர் 17, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 3 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். விஜய் சங்கர் 52 ரன்கள் எடுத்த நிலையில் லலித் யாதவ் பந்தில் போல்டானார். சிறப்பாக விளையாடிய பிரதோஷ் ரஞ்ஜன் பால் 212 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 116 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 427 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை தமிழக அணி டிக்ளேர் செய்தது.
124 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டெல்லி அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது. அனுஜ் ராவத் 14 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டானார். துருவ் ஷோரே 10 ரன்களுடனும் விகாஷ் மிஸ்ரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT