Published : 28 Dec 2022 10:33 PM Last Updated : 28 Dec 2022 10:33 PM
2022-ல் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அந்த 7 கேப்டன்கள்!
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை 2022-ல் மட்டும் ஏழு கேப்டன்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னின்று வழிநடத்தி உள்ளனர். இது ரசிகர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது. அணியை வழிநடத்திய அந்த ஏழு கேப்டன்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
இதெல்லாம் நடக்க காரணமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விலகல்தான். கேப்டன் என்ற அவரது பதவி முடிவுக்கு வந்ததும் அந்த பொறுப்பில் நிலைத்தன்மை என்பது இல்லாமல் போனது. அதன் பிறகு மூன்று பார்மெட்டுக்கும் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியை மாற்று வீரர்கள் வழிநடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து பார்மெட்டிலும் எதிரொலித்தது. இந்தியாவுக்கு ஒரு நிலையான கேப்டன் இல்லாமல் தவித்த ஆண்டு என்றும் 2022-ம் ஆண்டை சொல்லலாம். ஒவ்வொரு தொடருக்கும் வெவ்வேறு வீரர்கள், ஆடும் லெவன் என களம் இறங்கியது இந்தியா.
இந்தியாவின் அந்த 7 கேப்டன்கள்
2022-ல் முதல் கேப்டனாக தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்தி இருந்தார் கோலி. 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்ததும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதற்கு முன்பே அவர் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவரே 2021-ல் விலகி இருந்தார்.
கே.எல்.ராகுல் அதே தென் ஆப்ரிக்க பயணத்தின் ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்தினார். 2022-ல் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடர்களில் அவர் அணியை வழிநடத்தி உள்ளார்.
ரோகித் சர்மா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அணியை நடப்பு ஆண்டில் வழிநடத்தினார். ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்கும் அவர்தான் கேப்டன். ஆனாலும் 2022-ல் இந்தியா விளையாடிய 72 சர்வதேச போட்டிகளில் வெறும் 39 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார்.
ரிஷப் பந்த், தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 5 டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.
பும்ரா, இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கரோனா தொற்றால் வெளியேறிய ரோகித்துக்கு மாற்றாக கேப்டன் ஆனார்.
ஷிகர் தவான், ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.
ஹர்திக் பாண்டியா, டி20 தொடர்களில் அணியை வழிநடத்தி இருந்தார்.
WRITE A COMMENT