

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கனிஸ்தான் அணியை தோற்கடித்தது. எனினும், ஒரு ஓவரில் ஆப்கன் அணி 5 பந்துகளை மட்டுமே வீசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட் செய்த போது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நடுவர்களின் தப்பு கணக்கு என தெரிகிறது.
முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி உள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட் செய்தபோது நவீன்-உல்-ஹாக், நான்காவது ஓவரை வீசி இருந்தார். அந்த ஓவரில் ஐந்து பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. அந்த ஐந்து பந்துகளில் முறையே 1,1,4,3,0 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இருந்தும் வீசப்படாத அந்த ஒரு பந்தில் ஆஸ்திரேலியா எத்தனை ரன்கள் எடுத்திருக்கும். அது ஆட்டத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்ற விவாதம் ஒருபக்கம் எழுந்துள்ளது.
நடுவர்கள் தப்பு கணக்கு போட்டு இருந்தாலும் இதனை பந்து வீசிய ஆப்கன் வீரர்கள் மற்றும் களத்தில் பேட் செய்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் என யாரும் கவனிக்கவில்லை. இதே அடிலெய்ட் மைதானத்தைல கடந்த 2012 வாக்கில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மலிங்கா ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசி இருந்தார். அந்த போட்டி சமனில் முடிந்தது.