Published : 09 Nov 2016 11:09 AM
Last Updated : 09 Nov 2016 11:09 AM

மோசமான பீல்டிங்: ஸ்லிப்பில் 3 கேட்ச்களை நழுவ விட்ட ரஹானே, கோலி, விஜய்

ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது, விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

ஆனால், 2 தொடக்க வீரர்களும் பெவிலியன் திரும்பியிருக்க வேண்டும். அலிஸ்டர் குக் மற்றும் 19 வயது அறிமுக வலது கை பேட்ஸ்மென் ஹசீப் ஹமீத் இருவருமே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி இருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் ஸ்லிப் பீல்டிங் படுமோசமாக அமைந்தது.

மொகமது ஷமி, உமேஷ் யாதவ் இருவரும் அருமையான வேகத்துடன் சரியான லைன் மற்றும் லெந்த்தில் வீசினர். அலிஸ்டர் குக் பதற்றமான தொடக்க வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. மொகமது ஷமி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பீட்டன் ஆனார் அலிஸ்டர் குக். ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து வீச அடுத்த பந்து உண்மையான எட்ஜ் ஆனது. கல்லியில் ரஹானேயின் கைக்கு வந்த கேட்சை அவர் தட்டித் தட்டி கீழே நழுவ விட்டார்.

2-வது ஓவரை உமேஷ் யாதவ் வீச 2-வது பந்து அருமையான அவுட் ஸ்விங்கர் ஆக மீண்டும் குக்கிற்கு எட்ஜ் எடுததது. பந்து 2-வது ஸ்லிப்பில் கோலிக்கு இடதுபுறம் கேட்ச் பிடிக்குமாறு சென்றது நழுவ விட்டார் கோலி.

இன்னிங்சின் 6-வது ஓவரை மீண்டும் உமேஷ் யாதவ் வீச, இம்முறை இளம் ஹசீப் ஹமீத் எதிர்கொண்டார். ஆஃ ப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை ஹமீத் எந்த வித கால் நகர்த்தலும் இல்லாமல் தொட எட்ஜ் ஆகி நேராக முதல் ஸ்லிப்பில் விஜய் கைக்கு சென்றது, மிகவும் எளிதான வாய்ப்பு ஆனால் சோம்பேறித்தனமாக வினையாற்றிய முரளி விஜய் கேட்சை நழுவ விட்டார்.

இன்னும் கூட எட்ஜ் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது, ஆனால் அதன் பிறகு பந்து பீல்டர் கைக்குச் செல்லவில்லை முன்னாலேயே பிட்ச் ஆனது.

ஆக்ரோஷமாக ஆடுவோம், வெற்றி பெறுவோம் என்று தொடருக்கு முன்னால் சூளுரைக்கும் வீரர்கள் பவுலர்களை வெறுப்பேற்றும் விதமாக கேட்ச்களை கோட்டை விடுவது தொடருக்கு நல்ல ஆரம்பமாகத் தெரியவில்லை. அலிஸ்டர் குக் ஏற்கெனவே இந்திய அணியை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் படுத்தி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகிய 3 ஸ்பின்னர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x