Published : 11 Sep 2022 01:37 AM
Last Updated : 11 Sep 2022 01:37 AM
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியில் மிரட்டலான ரன் அவுட் எடுத்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, அவர் நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார்.
மருத்துவர் கண்காணிப்பிலிருந்ததால் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றார். தொடர்ந்து முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் ஜடேஜா விலகினார். அவர் சிகிச்சையிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்ப குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என்பதால் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்க போவதில்லை.
இதனிடையே, சில தினங்கள் முன் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜடேஜா, மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததை குறிப்பிட்ட அவர், அதற்காக பிசிசிஐ, சக வீரர்கள், பிசியோ மருத்துவர்கள், ரசிகர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்ப முயற்சிப்பேன் என்றும் ஜடேஜா அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ஜடேஜா காயம்பட்டதை பிசிசிஐ விரும்பவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகங்களுக்கு பேசியுள்ள அந்த அதிகாரி, "ஜடேஜாவின் காயத்தால் நாங்கள் மகிழ்ச்சி கொள்ளவில்லை. சாகச செயல்களைச் செய்யும்முன் அவர் உலகக் கோப்பையை மனதில் நினைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. உலகக் கோப்பையை பற்றி அவர் நினைக்கவில்லை. ஜடேஜாவின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT