Published : 25 Jul 2022 05:23 AM
Last Updated : 25 Jul 2022 05:23 AM
மாமல்லபுரம்/சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ‘நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ சாதனைக்காக நேற்று நடைபெற்ற செஸ் ஒத்திகைப் போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த ஒத்திகைப் போட்டியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகைபுரிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி போர் பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வரும் 28-ம் முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 187 வெளிநாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52,000 சதுரஅடி பரப்பு மற்றும் 22,000 சதுரஅடி பரப்பில் இரு நவீன விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 700 செஸ் போர்டு மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பெறுவதற்காக நேற்று ஒத்திகைப் போட்டி நடைபெற்றது. இதை தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதற்காக 707 செஸ் போர்டுகள் அமைக்கப்பட்டன.
இந்த ஒத்திகைப் போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகர்கோவில் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,414 செஸ் வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற ஒத்திகைப் போட்டியில் வீரர்கள் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றோருக்கு செஸ்ஒலிம்பியாட் குழுவினர் சிறப்புசான்றிதழ்களை வழங்கினர். மேலும், ஒத்திகைப் போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏபார்வையிட்டதுடன், செஸ் ஒலிம்பியாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, வீரர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவற்றை தரமான முறையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர், ஒரு வீரருடன் அமர்ந்து, சிறிது நேரம் செஸ் விளையாடினார்.
இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளில் போலீஸார் கவனமுடன் ஈடுபட்டனர். இப்பணிகளை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். பலத்த சோதனைக்குப் பிறகே, அனைவரும் அரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, ஒத்திகைப் போட்டி நடைபெற்ற அரங்கில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மண்டல அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வெளிநாட்டு வீரர்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டிகளைத் தொடங்கிவைக்கிறார்.
இந்நிலையில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்களை வரவேற்க, சென்னைவிமானநிலையத்தில் விளையாட்டுத் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன் மடகாஸ்கர், ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். தொடர்ந்து நேற்று 11 நாடுகளைச் சேர்ந்த, 32 வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தடைந்தனர். குறிப்பாக, உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 6 பேர், நைஜீரியா, உருகுவே, டோகோ, இங்கிலாந்து, ஹங்கேரியைச் சேர்ந்த 17 பேர் என 23 பேர் நேற்று காலையில் வந்தனர்.
அதேபோல, நேற்று இரவு வேல்ஸ், உருகுவே, ஐக்கிய அரபு நாடுகள், செர்பியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 9 வீரர்கள் சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு விளையாட்டுத் துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்கள் மீனம்பாக்கம், கிண்டிஉள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்படுகின்றனர். போட்டி தொடங்கியதும், மாமல்லபுரத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
வரும் 26-ம் தேதி இரவு முதல் 28-ம் தேதி காலை வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT