Published : 26 Jun 2014 09:17 PM
Last Updated : 26 Jun 2014 09:17 PM

கடி சம்பவம்: சுவாரேஸ் ஆட 4 மாதம் தடை; உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டார்

இத்தாலி வீரர் சியெலினியை தோள்பட்டையில் கடித்த உருகுவே வீரர் சுவாரேஸிற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட 4 மாதங்களுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது ஃபிஃபா.

இந்தத் தடையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய உருகுவே அணிக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரணம் முதல் போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிராக சுவாரேஸ் காயம் காரணமாக விளையாடவில்லை, மாறாக அவர் விளையாடிய அடுத்த 2 போட்டிகளில் அவர் கோல்களை அடித்து அணியை அடுத்தச் சுற்றுக்கு இட்டுச் சென்றார்.

இவர் 4 மாதங்களுக்கு கால்பந்து தொடர்பான பயிற்சி, விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாது.

உலகக் கோப்பை அடுத்த சுற்று போட்டி முதல் 9 சர்வதேச போட்டிகளிலும் விளையாட முடியாது. மேலும் சுவாரேசுக்கு 66,000 பவுண்டுகள் அபராதமும் விதித்தது ஃபிஃபா.

ஃபிஃபா தனது தீர்ப்பில் கூறியிருப்பததாவது: இது போன்ற நடத்தை களத்தில் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாதது. அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில், லட்சக்கணக்கானோர் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த நடத்தை மிகவும் கண்டிக்கத் தக்கது.

இந்தத் தடை குறித்து உருகுவே மேல் முறையீடு செய்தாலும், சனிக்கிழமை நடைபெறும் அடுத்த சுற்றின் முதல் போட்டியில் இவர் விளையாட முடியாது என்பது உறுதி.

ஆனால் இந்தத் தடை உத்தரவை உருகுவே கால்பந்து கூட்டமைப்பு கண்டித்துள்ளது. மேலும் இது இத்தாலி, ஆங்கில ஊடகங்கள் மற்றும் பிரேசிலின் சதி என்று வர்ணித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x