Published : 19 Mar 2022 07:28 AM
Last Updated : 19 Mar 2022 07:28 AM
சென்னை: கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு உதவிகள் செய்து வருகிறார்.
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சென்னை பாடியைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலியும் செஸ் வீராங்கனைதான். 20 வயதான வைஷாலி கடந்த 2018-ம் ஆண்டு மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கைப்பற்ற முயன்று வருகிறார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 3 முறை நெருங்கி நழுவவிட்டிருந்தார் வைஷாலி. இந்நிலையில் தற்போது வைஷாலி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு அவரது தம்பியான பிரக்ஞானந்தா உதவிகள் செய்து வருகிறார். இத்தனைக்கும் வைஷாலி விளையாடுவதை பார்த்துதான் தனது சிறு வயதில் பிரக்ஞானந்தா, செஸ் விளையாட்டே கற்றுக்கொண்டிருக்கிறார். கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள பிரக்ஞானந்தா உலக சாம்பியன் பட்டம் வெல்லும் குறிக்கோளுடன், தனது சகோதரியின் பெரிய கனவை அடையவும் உதவுகிறார்.
பிரக்ஞானந்தா கூறும்போது, எனது அக்காவின் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான். நான், அக்காவுடன் அடிக்கடி பயிற்சியில் ஈடுபடுவேன். அது அவருக்கு உதவுகிறது” என்றார்.
வைஷாலி கூறும்போது, “செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டம் பட்டம் வெல்வது கடினமானது, இதன் காரணமாகவே இந்தியாவில் இதுவரை 2 வீராங்கனைகள் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர். 10 வயதில் பிரக்ஞானந்தா என்னைவிட சிறந்த வீரராக மாறிவிட்டான், உலகின் இளம் சர்வதேச மாஸ்டர் ஆனார். மாஸ்டர் படத்துக்கான விதிமுறைகளை விரைவாக பூர்த்தி செய்தான். அவன் மிகவும் திறமையானவன், கடின உழைப்பாளியும் கூட. விளையாட்டின் போது பிரக்ஞானந்தா என்னை தோற்கடிக்க தொடங்கிய போது எங்களுக்குள் நிறைய சண்டைகள் இருந்தது.
நான், பிரக்ஞானந்தாவுடன் விளையாட்டு தொடர்பாக எதையும் எளிதாக விவாதிக்க முடியும். அவன், கிராண்ட் மாஸ்டர் நிலை வீரர்களுடன் விளையாடுவதால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும், அந்த வகையில் பிரக்ஞானந்தா எனக்கு உதவுகிறார். என்னிடம் கிராண்ட் மாஸ்டருக்கான விதிமுறைகளில் ஒன்று மட்டும் உள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 3 விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். நான் ஏற்கெனவே கிராண்ட் மாஸ்டர் விதிமுறையை மூன்று முறை தவறவிட்டேன், எப்படியோ தற்போது நெருங்கி வருகிறேன். இந்த ஆண்டு நான் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன், அதுதான் எனது குறிக்கோள்.
விஸ்வநாதன் ஆனந்த் சார், இந்த வயசுலேயும் விளையாடி கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரக்ஞானந்தா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. உலக சாம்பியனாவதற்கு பிரக்ஞானந்தாவுக்கு வாய்ப்பு இருப்பதாக பல முன்னணி வீரர்கள் கூறுகிறார்கள். நேர்மறையான அல்லது எதிர்மறையான விஷயங்கள் ஒருபோதும் அவனை பாதிக்காது. அவன், எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டான். இதுதான் அவனுக்கு பெரிய பிளஸ். அவனிடம் இருந்து நான் இந்த குணத்தை பெற வேண்டும். வீட்டில் செஸ் விளையாடாத நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்போம். பெரும்பாலும் நகைச்சுவை படங்கள்தான் பார்த்து மகிழ்வோம். இல்லையென்றால் பாட்மிண்டன் விளையாடுவோம், சைக்கிள் ஓட்டுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT