Published : 31 Jan 2022 04:52 PM
Last Updated : 31 Jan 2022 04:52 PM

'கேப்டன் பொறுப்பு வகிக்க கடினமான நாடு, இந்தியாதான்' - ரோஹித், கோலி குறித்து ரிக்கி பான்டிங் கருத்து

துபாய்: ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ஏற்ற ஒரு வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார். ரோஹித்தின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள அவர், விராட் கோலியின் ஓய்வு தனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் புகழ்பெற்ற கேப்டன் ரிக்கி பான்டிங். சமீபத்தில் இவர் ஐசிசிக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள், இந்நாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா தொடர்பாக பேசிய பான்டிங், "மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் கேப்டனாக நுழைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, முதல் சில ஆட்டங்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாட முடியாத நிலை. என் இடத்தை மற்றொரு இளம்வீரருக்கு கொடுக்க முடிவெடுத்து அந்த அணியில் இருந்து விலகினேன். எனக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு பொருத்தமான நபர் யார் எனக் கேள்வி எழுந்தபோது ஒரே ஒரு இளம் வீரர் மட்டுமே அணியை வழிநடத்த முடியும் என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது. அதுதான் ரோஹித் சர்மா.

அந்தத் தருணத்திலிருந்து தற்போதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் என்ன செய்தார் என்பதன் ஆதாரத்தை ஐபிஎல் ரெக்கார்டுகள் சொல்லும். மும்பை அணியின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித். சிலசமயங்களில் கோலி இல்லாதபோது இந்திய அணியையும் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். சிலர் கடந்த 2-3 ஆண்டுகளில் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ன செய்தார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, மற்றவர்களை போல அவரும் அந்தக் காலக்கட்டத்தில் நன்றாகவே விளையாடினார். ஷார்ட் ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதே ஐசிசி பேட்டியில், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது குறித்து பேசிய ரிக்கி பான்டிங், "விராட் கோலி, டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன். ஏனென்றால் கடந்த ஐபிஎல் சீசனின்போது கோலியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் உரையாடலின்போது ஷார்ட் ஃபார்மெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு, டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக மட்டும் தொடர இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். டெஸ்ட் கேப்டன் பணியை மிகவும் நேசித்ததே கோலியின் அந்த முடிவுக்கு காரணம். உண்மையாகவே, அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி நிறைய சாதனைகளை செய்தது. இதனால்தான் அந்தச் செய்தி எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.

உலகில் கேப்டன் பதவி வகிக்க மிகவும் கடினமான ஒரு நாடு என்றால், அது இந்தியாவை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவு அங்கு கிரிக்கெட் பிரபலம். ஒவ்வொரு இந்தியரும் தங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்றே நினைப்பார்கள். விராட் கோலிக்கு இப்போது 33 வயதாகிறது. இன்னும் சிலவருடங்கள் அவர் விளையாடலாம். கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு இல்லாமல், பேட்ஸ்மேனாக விளையாடினால், அது அவருக்கு இன்னும் சில வருடங்கள் விளையாடுவதை எளிதாக்கலாம்" என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x