Published : 27 Jan 2022 04:35 PM
Last Updated : 27 Jan 2022 04:35 PM

IND vs WI | அஸ்வின் அவுட், குல்தீப் ரிட்டர்ன்... இந்திய அணி தேர்வு எப்படி இருக்கிறது? - ஒரு பார்வை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுடன், புதுமுகங்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள், சர்ப்ரைஸ் மாற்றங்கள் உள்ளிட்டவற்றுடன், அணித் தேர்வு எப்படி இருக்கிறது என்பது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள அணியில் இளம் முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை நிரூபித்து இருப்பதால் இந்தத் தொடர் மூலம் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முழங்கால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. தென்னாபிரிக்க தொடரில் இடம்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தத் தொடருக்கு தேர்வாகவில்லை.

அஸ்வின் ஏன் தேர்வாகவில்லை? - 2017 முதல் ஒயிட்-பால் கிரிக்கெட்டுக்கு தேர்வாகாத ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சர்ப்ரைஸாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடர் அஸ்வின் மீண்டும் ஷார்ட் பார்மெட் போட்டிகளுக்காக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். இதில் மோசமில்லாத அவரின் பெர்ஃபாமென்ஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் தேர்வாக வைத்தது. ஆனால், இந்த முறை அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மிடில் ஓவர்களில் அஸ்வின் விக்கெட் எடுக்க தவறியதால் முன்னாள் வீரர்களிடம் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்தநிலையில்தான் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடருக்கு அஸ்வினை தேர்வுக்குழு எடுக்கவில்லை. அவர் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தை பிசிசிஐ வெளியிடவில்லை, என்றாலும், மணிக்கட்டு மற்றும் கணுக்கால் காயம் காரணமாக அவர் அணிக்கு தேர்வாகவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாடும்போது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மணிக்கட்டு மற்றும் கணுக்கால் காயம் ஏற்பட்டதாகவும், அதில் இருந்து குணமடைய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை என்பதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

எப்படி இருக்கிறது இந்திய அணித் தேர்வு? - மொத்தம் 18 பேர் கொண்ட அணியை பார்க்கும் போது தேர்வுக்குழு சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியது தெரியவருகிறது. ஆல்-ரவுண்டர்கள் தேர்வு, குல்தீப் யாதவ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது போன்ற முடிவுகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

ஆல்-ரவுண்டர்கள்: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணியாக பார்க்கப்பட்டது ஆல்-ரவுண்டர்களின் பங்களிப்பு பெரிய அளவு இல்லாததுதான். வெங்கடேஷ் ஐயர், தென்னாப்பிரிக்காவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் மேற்கிந்திய தீவு தொடரில் ஒருநாள் போட்டிகளை பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். என்றாலும், டி20 போட்டிகளில் அவரை தேர்வு செய்துள்ளது. டி20 பார்மெட்களில் அவரின் தேவை அதிகம் என்பதால் இந்த சாய்ஸை தேர்வுக்குழு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்களாக இருந்தவர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா. இருவரும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர்கள் இடத்தை நிரப்ப ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு ஆல்-ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இப்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆல்-ரவுண்டர் ஆப்ஷனில் மேலும் இருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், மற்றொருவர் தீபக் ஹூடா. நீண்ட நாட்களுக்குப் பிறகு காயத்தில் இருந்து திரும்பிய வாஷிங்டன் சுந்தர் ஷார்ட் பார்மெட் போட்டிகளில் திறமையான பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்து வருகிறார். அவரின் தேர்வு முக்கியவத்துவம் வாய்ந்துள்ளது. இதுவரை இந்தியாவுக்காக விளையாடாத தீபக் ஹூடா, உள்நாட்டு போட்டிகளில் நல்ல பெர்ஃபாமென்ஸ் காட்ட அவரையும் ஒருநாள் போட்டிகளுக்காக தேர்வுக்குழு பரிசீலித்துள்ளது.

தென்னாபிரிக்க தோல்வி, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை தொடர் போன்றவற்றை கருத்தில் கொண்டு தேர்வுக்குழு ஆல்-ரவுண்டர்கள் தேர்வில் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. தேர்வு செய்யப்பட்ட ஐவருமே பந்துவீச்சாளர்கள் என்பதை தாண்டி சிறந்த பேட்ஸ்மேன்களாகவும் கடந்த ஆட்டங்களில் ஜொலித்துள்ளதால், யாரை பிளேயிங் லெவன் அணியில் இடம்பெற வைப்பது என்பது கேப்டனுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

குல்தீப் யாதவ் ரிட்டர்ன்: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மிடில் ஓவர்களில் இந்தியாவின் பந்துவீச்சு பெரிதாக ஈர்க்கவில்லை. அஸ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்க வைத்தது. அந்த மாற்றத்துக்கு விடையாக ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அஸ்வின் காயம், குல்தீப் யாதவ்வை எளிதாக அணியில் இடம்பிடிக்க வைத்திருந்தாலும், அவரின் தேர்வு சற்று ஆச்சர்யமே. கடந்த ஜூலையில் இலங்கை சுற்றுப்பயணத்திற்குப் பிறகு குல்தீப் பெரிதாக எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை. சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே தொடரில் கூட அவர் பங்கேற்கவில்லை.

அதேநேரம், வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் சாஹர் போன்ற ஸ்பின்னர்கள் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியும், அவர்களை தாண்டி குல்தீப் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. குல்தீப் - சஹால் காம்போவை மீண்டும் ஓர்க் அவுட் செய்து பார்க்கும் பொருட்டு அவர் தேர்வாகியிருக்கலாம். இவர்களுடன் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் புதுமுகமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியவர் பிஷ்னோய். அக்சர் படேல் டி20 போட்டிகளுக்கு திரும்புகிறார்.

இதனிடையே, குல்தீப் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது அவரின் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்விட்டரில் அவரை வரவேற்று ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

மேற்கிந்திய தொடருக்கு தேர்வுக்குழுவின் மற்றொரு சர்ப்ரைஸ் தேர்வு மூத்த வீரர் புவனேஷ்வர் குமார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டை கூட சாய்க்காத புவனேஷ்வர் ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதனால் இனி அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்று பேசப்பட்ட நிலையில் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரை தேர்வு செய்யவில்லை.

மேற்கிந்திய தீவுகள் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் அணி. குறிப்பாக டெப்த் ஓவர்களில் அந்த அணியை கட்டுப்படுத்துவது கடினம். அவர்களை கட்டுப்படுத்த அனுபவமிக்க பந்துவீச்சாளர் என்ற முறையில் 'டெப்த் ஸ்பெஷலிஸ்ட்' புவனேஷ்வர் குமார் தேர்வாகி இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. சீனியர் புவனேஷ்வருடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சு கூட்டணியில் இணைந்துள்ளனர்.

ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x