Last Updated : 02 Mar, 2016 03:07 PM

 

Published : 02 Mar 2016 03:07 PM
Last Updated : 02 Mar 2016 03:07 PM

2016-ல் விராட் கோலியின் டி20 சராசரி; தோனியின் சிக்ஸ் சாதனை: சுவையான தகவல்கள்

டி20 கிரிக்கெட்டில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியின் 2016-ம் ஆண்டு டி20 சராசரி இதுவரை 103.66 ஆகும்.

மொத்தம் 6 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள் ஒரு 49. இந்த 49 ரன்களில் அவருக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 சதமும் எடுத்திருப்பார் ஆனால் 90-களில் ஆட்டமிழந்தார்.

அதே போல் இலக்கைத் துரத்துவதில் கோலி தனது சராசரியை 79.66 ஆக உயர்த்தியுள்ளார். இவரது ஒட்டுமொத்த டி20 சராசரி 51.03.

இலங்கைக்கு எதிராக அவர் நேற்று எடுத்த அரைசதம் அந்த அணிக்கு எதிரான இவரது 3-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. 2012- பல்லகிலே மைதானத்தில் 48 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். 2014-ல் டாக்காவில் 58 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். தற்போது நேற்று 47 பந்துகளில் 56 ரன்கள்.

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 7-வது ஆட்ட நாயகன் விருதை நேற்று வென்றார். யுவராஜ் சிங்கும் 7 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார், ஆனால் இவர் 49 போட்டிகளில் இந்த விருதுகளைப் பெற கோலியோ 36 போட்டிகளில் 7 ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் சிக்ஸ் ஒன்றை அடித்த கேப்டன் தோனி, கேப்டனாக தனது 200-வது சிக்ஸரை அடித்துள்ளார். ஒரு கேப்டனாக அதிகபட்ச சிக்ஸ்களை அடித்தது தோனியே. இவருக்கு அடுத்த படியாக ரிக்கி பாண்டிங் கேப்டனாக 171 சிக்சர்களை அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன் பதவிக்கு வரும் முன்னர் தோனி 98 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டம் குறித்து விராட் கோலி கூறியதாவது:

"மேலும் ஒரு நெருக்கடி நிலை. 16/2 என்று இருந்தோம். நமக்கு நாமே சவால் விடுத்துக் கொள்வது சிறந்தது. குலசேகரா, அஞ்சேலோ மேத்யூஸ் சிறப்பாக வீசினர். நான் பந்துகளை நன்றாக அடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்த நான், எதிர்முனை பேட்ஸ்மெனின் அழுத்தத்தை குறைக்க என் மீது பொறுப்பைக் கூட்டிக் கொண்டேன். அவ்வப்போது பவுண்டரி அடிப்பது என்று திட்டமிட்டேன்.

அதேபோல் குலசேகரா, மேத்யூஸ் உள்ளிட்ட இலங்கை பவுலர்கள், சமீரா நீங்கலாக நல்ல அளவில் வீசினர் எனவே கிரீசை விட்டு வெளியே வந்து இவர்களை எதிர்கொள்வது என்று முதலிலேயே திட்டமிட்டேன். எனவே அவர்கள் அந்த லெந்த்தில் போட விடாமல் செய்வதே திட்டம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x