Published : 06 Aug 2015 09:47 AM
Last Updated : 06 Aug 2015 09:47 AM

தடை செய்யப்பட்ட வீரருடன் விளையாடி சர்ச்சையில் சிக்கிய பிரவீண் டாம்பே

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் மும்பையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரவீண் டாம்பே. இவர், அமெரிக்காவில் நடைபெற்ற அனுமதியில்லாத டி20 போட்டியில், வாழ்நாள் தடை பெற்றுள்ள வங்கதேச வீரர் முகமது அஷ்ரபுல்லுடன் இணைந்து விளையாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற லாரன் ஹில் டி20 கிரிக்கெட் போட்டியில் 43 வயதான டாம்பேவும், மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி வாழ்நாள் தடை பெற்ற முன்னாள் வங்கதேச கேப்டன் முகமது அஷ்ரபுல்லும் தெற்கு குஜராத் சிசி ஜூனியர் அணிக்காக விளையாடியுள்ளனர்.

அந்தப் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் டாம்பே அனுமதி பெறவில்லை என தெரிகிறது. ஐசிசி விதிமுறைப்படி தடை செய்யப்பட்ட வீரருடன் இணைந்து விளையாடக்கூடாது. இதேபோல் ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்கள், கிரிக்கெட் சங்கங்களின் அனுமதியில்லாமல் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக்கூடாது.

இங்கிலாந்தில் லிவர்பூல் லீக்கில் விளையாடி வந்த பிரவீண் டாம்பே, விடுமுறைக்காக அமெரிக்கா சென்றபோது அஷ்ரபுல்லுடன் விளையாடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இது தொடர்பாக பிரவீண் டாம்பே கூறுகையில், “அது என்ன மாதிரியான போட்டி என்பதுகூட எனக்கு தெரியாது. எனது நண்பரை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். கிரிக்கெட் விளையாடுவதற்கான உபகரணங்களைக்கூட எடுத்துச் செல்லவில்லை. பயிற்சி போட்டி என்றுதான் என்னிடம் கூறப்பட்டது. பீல்டிங் செய்வதற்காக களமிறங் கியபோதுதான் அங்கு அஷ்ரபுல் இருப்பதைப் பார்த்தேன். அது வரை அவர் விளையாடுவது குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.

இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க இணைச் செயலர் பி.வி.ஷெட்டி கூறுகையில், “டாம்பே விவகாரம் குறித்து அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். அது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மும்பை கிரிக்கெட் சங்க கூட்டத்துக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x