Published : 17 Aug 2017 10:05 AM
Last Updated : 17 Aug 2017 10:05 AM

பகலிரவு டெஸ்டில் இங்கிலாந்து - மே.இ.தீவுகள் இன்று மோதல்

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் இன்று பகலிரவு ஆட்டமாக தொடங்குகிறது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பிர்மிங்காமில் இன்று பகலிரவு ஆட்டமாக தொடங்குகிறது. இங்கிலாந்து முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. பிங்க் பந்தில் விளையாட உள்ளது அந்த அணி வீரர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-வது முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது. அந்த அணி கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வி கண்டிருந்தது.

ஒட்டுமொத்தத்தில் இன்று தொடங்க உள்ள டெஸ்ட் போட்டி 5-வது பகலிரவு போட்டியாகும். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 3 பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. அந்த அணி தனது சொந்த மண்ணில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.

இங்கிலாந்து அணியில் உள்ள சில வீரர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கவுன்டி போட்டிகளில் பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர்.

இதனால் அந்த அனுபவம் அவர்களுக்கு உதவக்கூடும். மேலும் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் ஆசஷ் டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் பகலிரவு ஆட்டமாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நியூஸிலாந்து தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாகவும் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

இந்த இரு தொடர்களும் இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதனால் இந்த ஆட்டங்களுக்கு சிறந்த முறையில் தயாராகும் விதமாக தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பகலிவு டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள் எனத் தெரிகிறது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அதேவேளையில் இங்கிலாந்து நேரப்படி இரவு 9 மணிக்கு ஒவ்வொரு நாள் ஆட்டமும் முடிவடையும். முதன் முறையாக பகலிரவு டெஸ்ட்டில் விளையாட உள்ளதால் உணவு, தேநீர் இடைவேளையை எதிர்கொள்வதில் இங்கிலாந்து வீரர்களுக்கு சற்று சிரமம் ஏற்படக்கூடும்.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரை எதிர்கொள்கிறது. அதேவேளையில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ச்சியாக 6 தொடர்களை இழந்த நிலையில் களமிறங்க உள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x