Published : 16 Aug 2017 10:43 AM
Last Updated : 16 Aug 2017 10:43 AM

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் முதன் முறையாக 28-வது இடத்தை பிடித்துள்ளார்.

இடது கை வீரரான ஷிகர் தவண், பல்லேகலேவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 10 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார்.

96 பந்துகளில் 108 ரன்கள் விளாசிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, 45 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங்கில் முதல் 5 இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், வில்லியம்சன், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முறையே 1 முதல் 5-வது இடங்களில் நீடிக்கின்றனர்.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மொகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்திலும், உமேஷ் யாதவ் ஒரு இடம் முன்னேறி 21-வது இடத்திலும் உள்ளனர். கடைசி டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 5 விக்கெட்கள் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 58-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், 29 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். முதல் 5 இடங்களில் ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹசல்வுட், ரங்கனா ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தை இழந்துள்ளார். இரு புள்ளிகள் வித்தியாசத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல்-ஹசன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர், 431 புள்ளிகள் பெற்றுள்ளார். அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா கூடுதலாக இரு புள்ளிகள் பெற்று 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. 15 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிக்கா 2-வது இடம் வகிக்கிறது. இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூஸிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் 90 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் நீடிக்கிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x