Published : 17 Aug 2017 10:04 AM
Last Updated : 17 Aug 2017 10:04 AM

புரோ கபடி லீக்கில் ஹரியாணாவுக்கு எதிரான ஆட்டத்தை டையில் முடித்தது தமிழ் தலைவாஸ் அணி

புரோ கபடி லீக் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஹரியாணா அணி 2-0 என முன்னிலை பெற்ற நிலையில் பிரபஞ்சன் தனது சிறப்பான ரைடு மூலம் தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் புள்ளியை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து பிரஞ்சன், அஜய் தாக்குர் ஆகியோர் புள்ளிகள் சேர்க்க 5-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் 5-4 என முன்னிலை பெற்றது.

இந்த சூழ்நிலையில் அஜய் தாக்குரை சூப்பர் டேக்கிள் முறையில் ஹரியாணா மடக்கி பிடித்ததால் அந்த அணி 6-5 என முன்னேறியது. இதன் பின்னர் இரு அணிகளும் சீராக புள்ளிகள் சேர்க்க 18-வது நிமிடத்தில் ஆட்டம் 10-10 என சமநிலையில் இருந்தது. இந்த சமயத்தில் ஹரியாணா வீரர் சுர்ஜித் சிங் ரைடு மூலம் ஒரு புள்ளி சேர்க்க 11-10 என்ற முன்னிலை உருவானது. 20-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர் பிரபஞ்சனை, ஹரியாணா அணி சூப்பர் டேக்கிள் முறையில் மடக்கிப் பிடித்தனர். இதனால் முதல் பாதியில் ஹரியாணா அணி 13-10 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதியின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். பிரபஞ்சன், வினித் குமார் ஆகியோர் ரைடில் அசத்த ஹரியாணா அணி ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழ் தலைவாஸ் 17-14 என முன்னிலைப் பெற்றது. எனினும் ஹரியாணா அடுத்தடுத்து புள்ளிகள் சேர்த்து 16-17 என நெருங்கி வந்தது. இந்த சூழ்நிலையில் பிரபஞ்சன் ஒரே ரைடில் 2 புள்ளிகள் சேர்க்க 19-16 என்ற முன்னிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் சுர்ஜித் சிங், விகாஷ் கன்டோலா ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகள் சேர்க்க ஹரியாணா அணி 20-21 என மீண்டும் நெருங்கி வந்தது. 2.51 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் ஹரியாணா அணி ஆட்டத்தை 22-22 என சமநிலைக்கு கொண்டு வந்தது. இந்த சூழ்நிலையில் ரைடு சென்ற பிரபஞ்சனை ஹரியாணா வீர்ர்கள் மடக்கிப் பிடிக்க அந்த அணி 23-22 என முன்னிலைப் பெற்றது.

கடைசி கட்டத்தில் சிறப்பான ரைடு மூலம் ஆஷிஸ் சோகர் இரு புள்ளிகள் எடுக்க ஹரியாணா 25-24 என வெற்றியை நெருங்கியது. ஆனால் தமிழ் தலைவாஸ் வீரர் டாங் ஜியோன் லி, போனஸ் கோடை தொட்டு ஒரு புள்ளி சேர்க்க ஆட்டம் 25-25 என சமநிலையை அடைந்தது. இதன் பின்னர் இரு அணியின் கடைசி ரெய்டிலும் புள்ளி சேர்க்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 25-25 என டையில் முடிவடைந்தது.

ஹரியாணா அணித் தரப்பில் சுர்ஜித் சிங் ரைடு மூலம் 4 புள்ளிகளும், சுரேந்தர் நாடா டேக்கிள் மூலம் 7 புள்ளிகளும் சேர்த்தனர். தமிழ் தலைவாஸ் அணித் தரப்பில் பிரபஞ்சன் ரைடு மூலம் 7 புள்ளிகளும், அமித் ஹூடா டேக்கிள் மூலம் 6 புள்ளிகளும் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x