Published : 16 Aug 2017 10:44 AM
Last Updated : 16 Aug 2017 10:44 AM

நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கி தொடரை வென்றது இந்திய அணி

உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான ஹாக்கி தொடரை இந்திய அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் மன்பிரித் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் 9 வீரர்கள் ஜூனியர் வீரர்களாக இருந்தனர். எனினும் வலுவான நெதர்லாந்து அணிக்கு எதிராக அவர்கள், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 4-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதைப் பயன்படுத்தி வருண் குமார் இலக்கை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் பந்து நெதர்லாந்து கோல்கீப்பரின் கால்காப்பில் பட்டு திரும்பி வந்தது. அந்த சமயத்தில் அருகில் நின்ற குர்ஜந்த் சிங், சாமர்த்தியமாக செயல்பட்டு கோலாக மாற்றினார். சர்வதேச போட்டிகளில் குர்ஜந்த் சிங் அடித்த முதல் கோலாகவும் இது அமைந்தது. இந்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை கையாண்டது. அர்மான் குரேஷி அடித்த பந்து கோல்கம்பத்தின் அருகே விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. 2-வது கால் பாதியின் தொடக்கத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் ஆகாஷ் சிக்டே அற்புதமாக தடுத்தார். அந்த அணிக்கு அடுத்தடுத்து கிடைத்த மேலும் 3 பெனால்டி கார்னர்களிலும் கோல் விழாமல் பார்த்துக் கொண்டார் ஆகாஷ் சிக்டே.

3-வது கால் பகுதியிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்கள் பரபரப்பானது. நெதர்லாந்து அணி கொடுத்த நெருக்கடிகளை இந்திய வீரர்கள் சாமர்த்தியமாக எதிர்கொண்டனர். 50-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குர்ஜந்த் அடித்த பந்து, கோல் விழாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த நிமிடத்திலேயே இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை மன்தீப் கோலாக மாற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

58-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் சான்டர் டி வின், தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். ஆனால் மேற்கொண்டு அந்த அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x