Last Updated : 01 Aug, 2017 10:27 AM

 

Published : 01 Aug 2017 10:27 AM
Last Updated : 01 Aug 2017 10:27 AM

மகளிர் யுரோ கால்பந்து: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி; 43 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான யுரோ கால்பந்து தொடரின் அரை இறுதிக்கு டென்மார்க், இங்கிலாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ரோட்டர்டாம் நகரில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி - டென்மார்க் அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் 9-வது முறையாக பட்டம் வெல்லும் ஜெர்மனி அணியின் கனவு கலைந்தது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை கேர்ஷோவ்ஸ்கி முதல் கோலை அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனைகள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 49-வது நிமிடத்தில் நதியா நதிம் அருமையாக தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. ஆட்டம் நிறைவடைய 7 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் பிரடெரிக் தோகெர்சனிடம் இருந்து கிராஸை பெற்ற தெரசா நீல்சன் அற்புதமாக தலையால் முட்டி கோல் அடிக்க அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

தில்பர்க் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியா - ஸ்பெயின் அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும், அதன் பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் 60-வது நிமிடத்தில் டெய்லர் கோல் அடித்து அசத்தினார். கடந்த 43 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி தற்போது தான் முதன்முறையாக பிரான்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக அந்த அணி 1974-ம் ஆண்டு பிரான்ஸை வீழ்த்தியிருந்தது.

கடைசி கால் இறுதி ஆட்டத்தில் தொடரை நடத்தும் நெதர்லாந்து அணி, சுவீடனை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அந்த அணி தரப்பில் மார்டென்ஸ் 33-வது நிமிடத்திலும், மைதிமா 64-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். வரும் 3-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகளும், டென்மார்க் - ஆஸ்திரியா அணிகளும் பலப்பரீட்சை நடத்து கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x