Published : 09 Aug 2017 04:17 PM
Last Updated : 09 Aug 2017 04:17 PM

தன்னை அணியிலிருந்து நீக்கிய இங்கிலாந்துக்கு நன்றி: மனம் திறக்கிறார் கெவின் பீட்டர்சன்

2014-ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு எழுந்த பலவித சர்ச்சைகளில் பலிகடாவாக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார். தன்னை இங்கிலாந்து நீக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கெவின் பீட்டர்சன் இது குறித்து கூறியதாவது:

2014 ஆஷஸ் தொடருக்குப் பிறகு என்னை இங்கிலாந்து அணி நீக்கியதன் மூலம் எனக்கு நன்மை செய்துள்ளனர். இதனால் என் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது, மனைவி குழந்தைகளுடனான உறவை மீட்டெடுத்து மகிழ்ச்சியுடன் வாழ முடிகிறது.

என் மகன் டைலன் 2010-ல் பிறக்கும் போது மே.இ.தீவுகளிலிருந்து விமானத்தில் வந்து பார்த்து விட்டு மீண்டும் காத்விக்கில் அரையிறுதிப் போட்டியில் ஆட நான் திரும்ப வேண்டியிருந்தது. நான் ஆடவில்லை.

காரணம் என் மனைவிக்கும் எனக்கும் கடினமான காலங்கள் அது. ஒரு வீட்டில் 4 சுவர்களுக்குள் நடக்கும் விவகாரங்கள் பற்றி மக்கள் புரிந்து கொள்வதில்லை. எனக்கு அனைத்தும் தவறாகவே நடந்தது, ஒரு ஆண்டில் தினமுமே குடும்பப்பிரச்சினையை சந்தித்து வந்தேன். இங்கிலாந்துக்கு ஆடும் போது குடும்பம் ரணகளமாகவே இருந்தது.

இங்கிலாந்து அணி என்னை நீக்கியது என்னை உண்மையில் உயர்த்தியது, இதனையடுத்து தவறாகச் சென்ற விசயங்களை சரி செய்ய முடிந்தது. மக்கள் எப்போதும் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் என்றே எண்ணி வருகின்றனர். ஆனால் இப்போது வாழ்க்கை எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் இங்கிலாந்து டிரெட்மில்லில் ஓட விரும்பவில்லை, அது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு சலிப்பூட்டும் விஷயம்.

அணியிலிருந்து நீக்கப்பட்டது, அதன் பிறகு 6 மாதங்களுக்கு இருந்து வந்த ஆரவாரக் கூச்சல்கள் என் வாழ்க்கைக்கு சிறப்பானதைச் செய்துள்ளது. இப்போது நான் என் குழந்தைகளுடன் காலை கண் விழிக்கிறேன். பள்ளிக்கு கொண்டு விட்டு அழைத்து வருகிறேன், இரவில் அருகில் படுத்து உறங்குகிறேன். இப்போதைக்கு உலகின் சிறந்த தந்தை நான் என்ற பெருமை எனக்கு கிடைக்கிறது. நான் என் குழந்தைகள், குடும்பம் மற்றும் எனது ஆப்பிரிக்க வேர்களை போஷிக்கிறேன்.

இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருப்பது சாதாரண விஷயமில்லை. கண்டிப்பான பல விதிமுறைகள் உண்டு. இதைச் செய், அதைச் செய்யாதே என்று ஏதாவது ஓதிக்கொண்டேயிருப்பார்கள். இங்கிலாந்துக்கு ஆடியதால்தான் நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் கேப்டனாக பணியாற்றியது என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தினங்களாகும்.

இங்கிலாந்துக்கு ஆடும்போது ஆங்கிலேயனாக இருக்க மிகவும் பாடுபட வேண்டியதாக இருந்தது. என்னை தென் ஆப்பிரிக்கன் என்று சிலர் அழைக்கும் போது எனக்கு எரிச்சலும் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு ஆடும்போது எப்போதும் என்ன பேசுவது என்பதில் எனக்கு கவனம் அதிகமாகவே இருந்தது, நான் வித்தியாசமாக பேச முடியுமா? ஆனால் ஒருவர் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும், நாம் நாமாகத்தான் இருக்க முடியும். இங்கிலாந்துக்காக ஆடும்போது வெற்றிபெறவே ஆடினேன். 3 சிங்கங்களை அணிவதில் பெருமை அடைந்தேன், ஆனால் நான் ஆங்கிலேயனா? இல்லவேயில்லை, நான் ஒரு தென் ஆப்பிரிக்கன்.

இவ்வாறு கூறினார் கெவின் பீட்டர்சன்.

கெவின் பீட்டர்சன் பேட்டிங்கில் டெஸ்ட் போட்டிகளில் தனித்துவமான அம்சம் என்னவெனில் டேல் ஸ்டெய்ன் உச்சத்தில் இருந்தபோதே அவருக்கு எதிராக பீட்டர்சன் ஓவருக்கு அவரை சராசரியாக 5.74 ரன்களை அடித்திருந்ததே. உலகில் எந்த பேட்ஸ்மெனும் டேல் ஸ்டெய்னை டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய தன்னம்பிக்கையுடன் ஆடியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x