Published : 20 Jul 2017 10:13 PM
Last Updated : 20 Jul 2017 10:13 PM

115 பந்துகளில் 171 ரன்கள் விளாசல்: ஹர்மன்பிரீத் கவுரின் அதிரடியில் இந்திய அணி 281 ரன்கள் குவிப்பு

மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை புரட்டி எடுத்த ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் விளாச இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக நாட்டியுள்ளது.

ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியதால் அணிக்கு 42 ஒவர்கள் என்று குறைக்கப்பட்டது.

தனது 115 பந்துகளில் அடித்த 171 ரன்களில் 20 பவுண்டரிகளையும் 7 சிக்சர்களையும் விளாசித் தள்ளினார் கவுர்.

டாஸ் வென்று பேட்டிங்கை இந்திய அணி தேர்வு செய்த போது, தொடக்க வீராங்கனைகள் மந்தனா (6), ராவத் (14) ஆகியோர் சடுதியில் வெளியேற இந்திய அணி 9.2 ஓவர்களில் 35/2 என்று தடுமாறியது.

அப்போது கவுர், கேப்டன் மிதாலி ராஜ் இணைந்து ஸ்கோரை 25-வது ஓவரில் 101 ரன்களுக்கு நகர்த்தினர். அப்போது 61 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த மிதாலி ராஜ், ஆஸ்திரேலியாவின் பீம்ஸ் பந்து வீச்சில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு டிபி சர்மாவுடன் இணைந்த கவுர் வெளுத்து வாங்கினார் இருவரும் இணைந்து 82 பந்துகளில் 137 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக சேர்த்தாலும் இதில் சர்மாவின் பங்களிப்பு 35 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே. பீம்ஸ் பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்து 64 பந்துகளில் அரைசதம் கண்ட கவுர், 90 பந்துகளில் சதம் கண்டார், அதாவது அடுத்த 49 ரன்களை 26 பந்துகளில் விளாசிய கவுர், அடுத்த 25 பந்துகளில் 71 ரன்களை விளாசித்தள்ளினார்.

238/4 என்று 38.4 ஓவர்களில் இருந்த இந்திய அணி அடுத்த 3.2 ஓவர்களில் 43 ரன்களை விளாசியது என்றால் அதில் பெரும்பங்கு கவுரின் அதிரடியே பங்களிப்பு செய்துள்ளது, இந்திய அணியின் 281 ரன்களில் கவுர் மட்டுமே 171 ரன்கள் எனும்போது அவரது ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆஸி. அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு புரியாத புதிராக அமைந்தது, எந்த ஒரு திட்டமும் இலக்குமில்லாமல் வீசினர்.

கவுர் எடுத்த 171 ரன்கள் நாட் அவுட் இன்னிங்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிப்பட்ட ரன்கள் பட்டியலில் 5-வதாக உள்ளது. இந்திய அணியின் டிபி சர்மாதான் அயர்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்து அதிக ரன்களுக்கான இந்திய ஒருநாள் சாதனையை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பி.ஜே.கிளார்க் 1997-ம் ஆண்டு எடுத்த 229 நாட் அவுட்தான் ஒருநாள் கிரிக்கெட் சாதனையாக நீடித்து வருகிறது.

ஆஸ்திரேலியா இலக்கை விரட்டுகையில் 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x