Published : 23 Apr 2017 11:27 AM
Last Updated : 23 Apr 2017 11:27 AM

கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை: மீண்டும் மிரட்டுவாரா கெய்ல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி களை பெற்றுள்ளது. குஐராத் அணிக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் 187 ரன்கள் குவித்த போதிலும் கொல்கத்தா அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. முதல் 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை குவித்த கொல்கத்தா அணிக்கு இந்த தோல்வி எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது.

குஜராத் அணிக்கு எதிராக சுனில் நரேன் பேட்டிங்கில் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 96 ரன்கள் குவித்தது. இதனால் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் சேர்க்கும் என கருதப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் மணீஷ் பாண்டே 21 பந்துகளுக்கு 24 ரன்களே சேர்த்தார்.

ஏறக்குறைய பந்துகளுக்கு நிகராகவே அவர் ரன்கள் சேர்த்தது சற்று பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த விஷயத்தில் கொல்கத்தா அணி இன்று கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் ஷாகிப் அல்-ஹசன் நீக்கப்பட வாய்ப்புள்ளது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3 ஓவர்களில் 31 ரன்கள் வழங்கிருந்தார். இதனால் அவருக்கு பதிலாக டிரென்ட் போல்ட் இடம்பெறக்கூடும்.

மோசமான விக்கெட் கீப்பிங்கும் கொல்கத்தா அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பகுதிநேர விக்கெட் கீப்பரான ராபின் உத்தப்பா கடந்த ஆட்டத்தில் ரெய்னா கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரெய்னா 84 ரன்கள் விளாசி வெற்றியை பறித்துச் சென்றார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சவுராஸ்டிராவை சேர்ந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான ஷெல்டன் ஜேக்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது. இது நிகழ்ந்தால் உத்தப்பா பேட்ஸ்மேனாகவே களமிறங்குவார். அதேவேளையில் மோசமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை இழக்க நேரிடும். அவர் 4 ஆட்டங்களில் 29 ரன்களே சேர்த்துள்ளார்.

பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. இந்த சீசனில் ரன் சேர்க்க தடுமாறிய பெங்களூரு அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அதிரடி பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த ஆட்டத்தில் கெய்ல் 77, விராட் கோலி 64 ரன்கள் விளாச பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்து மிரட்டியது.

தொழில்முறை டி20-ல் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள கெய்லிடம் இருந்து மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் வெளிப்படக்கூடும். கேதார் ஜாதவ், டிரெவிஸ் ஹெட் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் நெருக்கடி தரக்கூடும்.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x