Published : 14 Mar 2018 09:55 AM
Last Updated : 14 Mar 2018 09:55 AM

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் மீது அதிக எதிர்பார்ப்பு

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரானது பாட்மிண்டன் போட்டிகளில் மிகவும் மதிப்பு வாய்ந்த தொடராக கருதப்படுகிறது. எந்த ஒரு வீரரும், வீராங்கனையாக இருந்தாலும் ஒருமுறையாவது இந்தத் தொடரில் பட்டம் வெல்வதை வாழ்நாள் சாதனையாக கொண்டுள்ளனர். இந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பிரகாஷ் படுகோன் 1980-ம் ஆண்டும், கோபி சந்த் 2001-ம் ஆண்டும் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.

சுமார் ரூ.6.4 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்தத் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. 17 வருடங்களுக்கு பிறகு தற்போது கோபிச்சந்தின் பயிற்சியின் கீழ் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர்.

சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றை எளிதாக கடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் கால்பதித்த சாய்னா நெவாலுக்கு முதல் சுற்று கடினமாக அமைந்துள்ளது. 11-ம் நிலை வீராங்கனையான அவர் முதல் சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான சீன தைபேவின் தாய் சூ யிங்குடன் மோதுகிறார்.

தாய் சூ யிங்குடன் 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ள சாய்னா நெவால் 5 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக விளையாடி 7 ஆட்டங்களிலும் தாய், சூ யிங்கை சாய்னாவால் வீழ்த்த முடியாமல் போனது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியும் அடங்கும்.

4-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 22-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோசுவாங்குடன் மோதுகிறார். இந்த ஆட்டத்தில் சிந்து எளிதாக வெற்றி பெறக்கூடும் என்றே கருதப்படுகிறது. 2-வது சுற்றில் சிந்து கடும் சவாலை சந்திக்கக்கூடும்.

இந்த சுற்றில் அவர், 10-ம் நிலை வீராங்கனையான சீனாவின் பிவென் ஜாங்குடன் மோதக்கூடும். பிவென் ஜாங், இந்தியா ஓபன் தொடரில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து இதுவரை கால் இறுதி சுற்றை கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அவர், கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் சுற்றில் பிரான்சின் பிரைஸ் லெவர்டெஸூடன் மோதுகிறார். 23-ம் நிலை வீரரான பிரைஸ் லெவர்டெஸை, கிடாம்பி எளிதாக வீழ்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரவரிசையில் 3-வது உள்ள ஸ்ரீகாந்த், கடந்த ஆண்டில் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்கள் வென்று சாதனை படைத்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்ரீகாந்த், முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தார். ஆனால் தற்போது சிறந்த பார்மில் இருப்பதால் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் கடும் சவால் அளிகக்கக்கூடிய முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் இம்முறை காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் ஸ்ரீகாந்த் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் வாகை சூட வாய்ப்பு உள்ளது.

முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சூ யிங்கை எதிர்கொள்வது குறித்து சாய்னா நெவால் கூறும்போது, “தாய் சூ யிங் கடந்த ஆண்டில் பல்வேறு தொடர்களை வென்றார், இந்திய வீராங்கனைகள் மட்டும் அவரிடம் தோல்வியடைய வில்லை. மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் தோல்வி கண்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் அவர்தான் சிறந்த வீராங்கனை, விளையாட்டில் தந்திரமாகவும், அதிக கவனவமும் செலுத்தும் திறனை தாய் சூ யிங் கொண்டுள்ளார். ஆனால் அவர், வீழ்த்த முடியாத வீராங்கனை ஒன்றும் இல்லை. அவரை வீழ்த்துவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

இந்தத் தொடர் குறித்து பி.வி.சிந்து கூறும்போது, “6 வாரங்கள் பயிற்சி எடுத்துள்ளேன். சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டில் அதிக அளவிலான தொடர்கள் நடைபெற உள்ளது. எனவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இந்த மூவருடன் மற்ற இந்திய வீரர்களான சாய் பிரணித், பிரணாய் ஆகியோர் இந்தத் தொடரில் கலந்து கொள்கின்றனர். சிங்கப்பூர் ஓபன் சாம்பியனான சாய் பிரணித் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதுகிறார். சன் வான் ஹோ இதுவரை முதல் சுற்றில் தோல்வியடைந்தது கிடையாது. இதனால் சாய் பிரணித் வெற்றி பெற கூடுதல் மெனக்கெட வேண்டியதிருக்கும். 12-ம் நிலை வீரரான பிரணாய், 8-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோ டியன் சென்னுடன் மோதுகிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஷிராக் செட்டி, சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஜோடி, ஜப்பானின் தாகுரோ ஹோகி, யுகோ கோபயாஷி ஜோடியுடன் மோதுகிறது. இந்த சுற்றை இந்திய ஜோடி கடக்கும் பட்சத்தில் அடுத்து 2-ம் நிலை ஜோடியான டென்மார்க்கின் மத்தியாஸ், கார்ஸ்டென் மோஜென்சனுடன் பலப்பரீட்சை நடத்தக்கூடும்.

மற்றொரு இந்திய ஜோடியான மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில் இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ், கிறிஸ் லான்கிட்ஜ் ஜோடியை சந்திக்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி, ஜப்பானின் மிசாகி மட்சுமோ, அயகா தகாஹஸி ஜோடியுடன் மோதுகிறது.

சர்வீஸில் புதிய விதி

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் சர்வீஸ் செய்வதில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி தரையில் இருந்து 1.15 மீட்டர் தூரத்தில் வைத்துதான் பந்தை சர்வீஸ் செய்ய வேண்டும்.

இந்த புதிய விதிமுறை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக இந்திய வீரர், வீராங்கனைகள் தொழில்நுட்ப அதிகாரி வெமுரி சுதாகருடன் சில பயனுள்ள வகையிலான ஆலோசனைகளை பெற்றுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x