Published : 07 Mar 2018 10:07 AM
Last Updated : 07 Mar 2018 10:07 AM

ஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரைறுதியில் பெங்களூரு - புனே அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து முதல் கட்ட அரைறுதியில் பெங்களூரு எப்சி - எப்சி புனே சிட்டி அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள பாலேவாடி ஷிவ் சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

பெங்களூரு அணி அறிமுக தொடரிலேயே சிறந்த திறனை வெளிப்படுத்தி அரை இறுதியில் கால் பதித்துள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் லீக் ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு அணி 40 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அந்த அணி 18 லீக் ஆட்டங்களில் 13 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்விகளை பதிவு செய்திருந்தது. அதேவேளையில் புனே அணி தனது 4-வது முயற்சியில் முதன்முறையாக அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

இரு அணியிலும் உயர்மட்ட திறன் கொண்ட ஸ்டிரைக்கர்களும், பயனுள்ள நடுகள வீரர்களும் உள்ளனர். இவர்களுடன் பெங்களூரு அணிக்கு குர்பிரீத் சிங்கும், புனே அணிக்கு விஷால் கெய்த்தும் கோல்கீப்பராக பலம் சேர்க்கின்றனர். பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான வெனிசுலாவைச் சேர்ந்த மிகு இந்த சீசனில் 14 கோல்கள் அடித்துள்ளார். அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் அவர் 2-வது இடம் வகிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டனான சுனில் சேத்ரி 10 கோல்கள் அடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

இந்த சீசனில் புனே அணிக்கு எதிரான இரு லீக் ஆட்டங்களிலும் பெங்களூரு அணி சிறந்த திறனை வெளிப்படுத்தியது. புனே மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெங்களூரு அணி, தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. இந்த ஆட்டத்தை டிராவில் முடித்தன் மூலம் பெங்களூரு அணியின் தொடர்ச்சியான 5 வெற்றிகளுக்கு புனே அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது. எனினும் அதன் பின்னர் சிறந்த திறனை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஒரு தோல்வியை கூட பதிவு செய்யவில்லை. இதில் 7 வெற்றிகள் அடங்கும். ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்திருந்தது.

ஸ்பெயினைச் சேர்ந்த 55 வயதான ஆல்பர்ட் ரோகா பயிற்சியாளராக இருக்கும் பெங்களூரு அணி, கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் முக்கியமான இரு பின்கள வீரர்களான ஜான் ஜான்சனும், ஜூவானும் ஆகியோர் தடை காரணமாக விளையாடாத போதிலும் பெங்களூரு அணி வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்த ஆட்டத்தின் முடிவில் ஆல்பர்ட் ரோகா கூறும்போது, “ இந்த சீசனில் இது மிகவும் கடினமான பகுதி. லீக் சுற்றில் அதிக புள்ளிகள் குவித்து முதலிடத்தை பிடித்திருந்தோம். ஆனாலும் எங்களுக்குள் நெருக்கடி இருக்கிறது. தற்போது பணிவாகவும், சரியான மனநிலையுடன் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. லீக் போட்டிகளின் வெற்றிகள் எங்களுக்கு நம்பிக்கைக்கு உதவி உள்ளன. ஆனால் தற்போது போட்டிக்கு தயாராகுவதற்கு அதிக நேரம் இல்லை. இதனால் நாங்கள் சரியான மனநிலையுடன் விளையாட வேண்டும்.

சுனில் சேத்ரி இந்த சீசனில் 2 ஆயிரம் நிமிடங்களில் களத்தில் செலவிட்டுள்ளார். அவர் சிறப்பு வாய்ந்த வீரர், எப்பாதும் அணிக்கு சிறந்த பங்களிப்பை செய்து வருகிறார். தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடும் திறன் கொண்ட சேத்ரிக்கு இந்த சீசன் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அவரது செயல்திறனால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

பெங்களூரு அணி வலுவாக திகழும் நிலையில் புனே அணியும் சளைத்தது அல்ல. முன்களத்தில் உலகத் தரம் வாய்ந்த வீரரான மார்செலின்ஹோவுடன் உருகுவே நாட்டைச் சேர்ந்த எமிலியானோ ஆல்பரோ, பிரேசிலைச் சேர்ந்த டிகோ கார்லோஸ் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்களில் எமிலியானோ, கார்லோஸ் ஆகியோர் மீதான தடை முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்த மூவர் கூட்டணி, பெங்களூரு அணிக்கு நெருக்கடிக் கொடுக்கக்கூடும். நடுகளத்தில் அடில் கான், மார்கஸ் டெபார் வலு சேர்க்கின்றனர்.

செர்பியாவைச் சேர்ந்த ரேங்கோ போபோவிக் பயிற்சியாளராக இருக்கும் புனே அணி லீக் சுற்றில் 18 ஆட்டங்களில் 9 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 30 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்திருந்தது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் இரு புள்ளிகளை மட்டுமே பெற்றது. அரை இறுதி சுற்றின் முதல் கட்ட ஆட்டத்தை சொந்த மண்ணில் சந்திப்பதால் புனே அணி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

புனே அணி வெற்றிகரமாக வலம் வந்ததற்கு பயிற்சியாளரான ரேங்கோ போபோவிக், இளம் இந்திய வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் முக்கிய காரணம். இளம் வீரர்களான கெய்த், சார்டக் கோலுயி, ஐசக் வான்மல்சாமா, ஆஷிக் குரூயியன், ரோஹித் குமார், சஹில் பன்வார் ஆகியோர் இந்த சீசனில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x