Published : 24 Mar 2018 09:12 AM
Last Updated : 24 Mar 2018 09:12 AM

முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்க அணி: ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது.

கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. மார்க்ரம் 0, ஹசிம் ஆம்லா 31, டி வில்லியர்ஸ் 64, கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 5, தெம்பா பவுமா 1, குயிண்டன் டி காக் 3, பிலாண்டர் 8, கேசவ் மகாராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். டீன் எல்கர் 121, ரபாடா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. ராபாடா 22 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில், சிலிப் திசையில் நின்ற ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு டீன் எல்கருடன் இணைந்து ரபாடா 50 ரன்கள் சேர்த்தார். கடைசி வீரராக மோர்னே மோர்கல் 4 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்க அணி 97.5 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

434 நிமிடங்களை களத்தில் செலவிட்ட டீன் எல்கர் 284 பந்துகளை சந்தித்து ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை டீன் எல்கர் ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்புவது 3-வது முறையாகும். மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டெஸ்மண்ட் ஹேய்ன்ஸ் 3 முறை இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை டீன் எல்கர் சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ரபாடா வீசிய 4-வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ரபாடாவின் அடுத்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கும் நோபாலாக வீசப்பட்ட அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விளாசிய வார்னர் 2-வது பந்தில் ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

வார்னர் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு அவர், பான்கிராப்டுடன் இணைந்து 43 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கவாஜா 5, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்கள் எடுத்த நிலையில் மோர்னே மோர்கல் பந்தில் நடையை கட்டினர். 73 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் பான்கிராப்டுடன், ஷான் மார்ஷ் இணைந்தார். நிதானமாக பேட் செய்த அவர், 63 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்த சில ஓவர்களில் பான்கிராப்ட் (77), மிட்செல் மார்ஷ் (5) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார் பிலாண்டர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 2 ரன்களில் ரபாடா பந்தில் வெளியேறினர். 175 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் நாதன் லயன் மட்டையை சுழற்றினார். 48 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 47 ரன் விளாசிய அவர், மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 67 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. டிம் பெய்ன் 33, ஹசல்வுட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x