Published : 15 Mar 2018 08:48 AM
Last Updated : 15 Mar 2018 08:48 AM

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் கால்பதித்தார் ஹாலப்- மரின் சிலிச், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் கால் இறுதிக்கு முன்னேறினார். 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் ஆடவர் பிரிவில் 2-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சும் அதிர்ச்சி தோல்வியடைந்தார்கள்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச், 31-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் ஹோல்ஸ்கிரைபருடன் மோதினார். இதில் சிலிச் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 7-6, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி 18-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரேவிடம் தோல்வி கண்டார். 6-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ 6-4, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் 29-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரரை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் குயிங்கையும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் பிரான்சின் கரோலின் கார்சியாவையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினர்.

2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 5-7 என்ற நேர் செட்டில் 20-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கசட்கினாவிடம் தோல்வியடைந்தார். மற்ற ஆட்டங்களில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவையும் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தனர். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x