Published : 14 Mar 2018 09:55 AM
Last Updated : 14 Mar 2018 09:55 AM

முத்தரப்பு டி 20 தொடர்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்- இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் ரோஹித் சர்மா குழுவினர்

முத்தரப்பு டி 20 தொடரில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடைந்தால் கணித சாத்தியக் கூறுகள் அடிப்படையில் மற்ற இரு அணிகளின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும்.

கொழும்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியை 6 விக்கெட்கள் வித்தியாத்தில் வீழ்த்தியது இந்திய அணி. அதேவேளையில் வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 215 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது. புத்துணர்ச்சி பெற்றுள்ள அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மாறாக தோல்வியை சந்தித்தால் இலங்கை - வங்கதேச அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். அந்த ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப் போட்டியில் எளிதாக நுழைந்து விடும். மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் நிகர ரன் விகித அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அடுத்தடுத்து இரு வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி வலுவான ரன் விகிதத்தையே (+0.21) கொண்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் முடிவையும் கருத்தில் கொள்ள வேண்டியது இருப்பதால் அணித் தேர்வானது இளம் வீரர்களுக்கு சாதகமாக வகையில் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

தீபக் ஹூடா, முகது சிராஜ், அக்சர் படேல் ஆகியோருக்கு இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதில் ஹூடா கடந்த முறை இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரிலும் விளையாடும் லெவனில் இடம் பெறவில்லை.

இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததால் அணி நிர்வாகம் பரிட்சார்த்த முறைகளை நிச்சயம் கையில் எடுக்காது. இதுபோன்ற மனப்பான்மையை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி கடைப்பிடிக்கும் என்றே கருதப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் இந்தத் தொடரிலும் கவலை அளிக்கும் விதத்தில் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக வெள்ளை நிறப்பந்தில் அற்புதமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய அவர், பார்முக்கு திரும்பும் வகையில் பெரிய அளவிலான இன்னிங்ஸுக்காக காத்திருக்கிறார்.

சமீபகாலமாக சிறந்த பார்மில் உள்ள ஷிகர் தவணிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். நடுகளத்தில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 153 ரன்களை துரத்திய போது மணீஷ் பாண்டே (42), தினேஷ் கார்த்திக் (39) ஆகியோர் சிறந்த பங்களிப்பு செய்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவணுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இது நிகழும் பட்சத்தில் ரோஹித் சர்மா 4-வது வீரராக விளையாடுவார். ஏற்கெனவே அவர், ஐபிஎல் தொடரில் இந்த வரிசையில்தான் விளையாடி வருகிறார்.

பேட்ஸ்மேன்களை விட இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் இருக்கக்கூடும். ஏனெனில் வங்கதேச அணியின் பேட்டிங் வரிசை கணிக்க முடியாததாக உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா 139 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிஸூர் ரகிம் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டு இலங்கை மண்ணில் பெரிய அளவிலான இலக்கை துரத்திய முதல் அணி என்ற சாதனையை படைத்தது.

ஐபிஎல் தொடருக்காக ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஜெயதேவ் உனத்கட், முத்தரப்பு டி 20 தொடரில் 3 ஆட்டங்களிலும் அதிக ரன்களை வாரி வழங்கி உள்ளார். எனினும் அனுபவ வீரர் என்பதாலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதாலும் மட்டுமே அவர், அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

அதேவேளையில் ஷர்துல் தாக்குர், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் ஓரளவு ரன் குவிப்பை கட்டுப்படுத்துபவராக திகழ்கிறார். இலங்கை அணிக்கு எதிராக இரு ஆட்டங்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த யுவேந்திரா சாஹல், இந்தத் தொடரில் சரியான கூட்டணி இல்லாமல் சிரமப்படுவது தெளிவாக தெரிகிறது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.

வங்கதேசம்: மஹ்முதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், முஸ்பிஹூர் ரகிம், சபிர் ரஹ்மான், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், தஸ்கின் அகமது, அபு ஹைதர், அபு ஜயத், அரிபுல் ஹக்யு, நஸ்முல் இஸ்லாம், நூருல் ஹசன், மெகதி ஹசன், லிட்டன் தாஸ். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x