Published : 21 Mar 2018 09:49 AM
Last Updated : 21 Mar 2018 09:49 AM

இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவுவதால் வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம்: தினேஷ் கார்த்திக் கருத்து

இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவுவதால் வாய்ப்பை பயன்படுத்துவது அவசியம் என இந்திய தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

கொழும்பு நகரில் நடைபெற்ற முத்தரப்பு டி 20தொடரின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. 167 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடியாக சிக்சர் அடித்து வெற்றி தேடி கொடுத்தார். 8 பந்துகளைச் சந்தித்த தினேஷ் கார்த்திக் 29 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் பிரதான பங்கு வதித்தார். இந்நிலையில் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

முத்தரப்பு டி 20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான இறுதி ஆட்டம் தனிப்பட்ட முறையில் எனக்கு சிறந்த இன்னிங்ஸாக அமைந்தது. கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முடியும் என நம்பினேன். இந்தப் போட்டியில் தோற்றிருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும். ஏனெனில் லீக் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடினோம். 6-வது வீரராக களமிறங்காததில் வருத்தம் அடைந்தது உண்மைதான். ஆனால் ரோஹித் சர்மா அதற்கு விளக்கம் அளித்தார்.

முஸ்டாபிஸூர் ரஹ்மான் கடைசியில் பந்து வீசுவார். விஜய் சங்கர் இளம் வீரர் என்பதால் எதிர்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே அவர் பந்தை எதிர்கொள்ள உங்களால்தான் முடியும் என்றார். அவரது விளக்கத்தை ஏற்றுக் கொண்டேன். கடந்த வருடம் தமிழக அணி உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால்தான் நான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் தற்போது இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளோம். இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமானால் மாநில அணிக்காக சிறந்த பங்களிப்பு செய்ய வேண்டும்.

மேலும் இந்திய அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. உள்ளூர் போட்டிகளில் தமிழக அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாடியது இல்லை. ஆனால் ஏலத்தில் எந்த அணி நம்மை தேர்வு செய்யும் என்பது நம்முடைய கையில் இல்லை. ஐபிஎல் தொடரின் விசேஷமே ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் வேறு அணிக்காக விளையாடுவதுதான்.

முத்தரப்பு டி 20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார். பவர் பிளேவில் 3 ஓவர்கள் வீசுவது எளிதல்ல. தொடர் நாயகன் விருதுக்கு அவர் பொருத்தமானவர்தான். ஒரு முனையில் ரன்கள் அதிகம் வழங்கப்பட்ட நிலையில் வாஷிங்டன் சிறப்பாக பந்துவீசியது மிக சிறப்பான விஷயம். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் கொல்கத்தா அணியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை மாற்றங்களையே முதலில் செய்வேன். பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதுதான் எங்களது முதல் இலக்கு. அதன் பின்னர் தான் கோப்பையை வெல்வது குறித்து சிந்திக்க முடியும்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x