Published : 23 Mar 2018 08:44 AM
Last Updated : 23 Mar 2018 08:44 AM

உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேன்: மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ நம்பிக்கை

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தனியார் வங்கியான ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த டுவைன் பிராவோ, இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பிராவோ நிருபர்களிடம் கூறியதாவது:

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாதது என்பது பிபா உலகக் கோப்பை தொடரில் இத்தாலி அணி இல்லாமல் இருப்பது போன்றே இருக்கும். இந்த விஷயங்கள் சாத்தியம்தான். எந்த ஒரு அணிக்கும், அல்லது ஒரு நாட்டுக்கும் எதுவும் உத்தரவாதம் இல்லை. தற்போதைய அணி இளம் அணி. கிரிக்கெட் உலகம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை பார்க்க விரும்புவதுடன், சிறந்த போட்டியையும் காண விரும்புகிறது. அவர்கள் சிறப்பாக செயல்பட நான் வாழ்த்துகிறேன். உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது என்னை பொறுத்தவரையில் வீட்டுக்கு திரும்பியிருப்பது போன்றதாகும். கடந்த இரு வருடங்களாக நாங்கள் ஐபிஎல் தொடரை தவறவிட்டோம். ஐபிஎல் ஏலத்தை ஆஸ்திரேலியாவில் இருந்தபடி தொடர்ந்து கவனித்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணி நிர்வாகத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

பிக்பாஷ் தொடருக்கு பிறகு கிடைத்த ஓய்வை சிறப்பாக அனுபவித்தேன். சென்னை அணிக்காக சிறப்பாக செயல்படுவதற்காக உடல் அளவிலும் மனதளவிலும் தயாராக உள்ளேன்.

எங்கள் அணியானது உலகிலேயே சிறந்த கேப்டனால் வழிநடத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் என்னை பொறுத்தவரையில் சென்னை அணி அதிகம் சாதித்துள்ளது. மஞ்சள் ஆர்மியை மகிழ்விக்க விரும்புகிறேன். இந்தத் தொடரில் எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. அதிக அனுபவம் வாய்ந்த அணியையே நாங்கள் கொண்டுள்ளோம். ஷேன் வாட்சன், ஜடேஜா, தோனி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். மேலும் கூல் கேப்டன் தோனி எப்போதும் அழுத்தம் என்பது நாம் தழுவிக் கொள்ளக்கூடிய ஒன்று என்று கூறுவார்.

திறமையான இளம் உள்ளூர் வீரர்களுடன் இணைந்து செயலாற்ற உற்சாகமாக இருக்கிறேன். மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த குழுவில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி 20 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம், இந்த வடிவிலான கிரிக்கெட்டை நாங்கள் அதிகம் நேசிப்பதுதான்.

நாங்கள் ஆட்டத்தை விளையாட்டு உணர்வு, மனப்பான்மை, நம்பிக்கையுடன் விளையாடுகிறோம். இயற்கையாகவே நாங்கள் மற்றவர்களை மகிழ்ச்சியடைச் செய்யக்கூடியவர்கள். இதனால் டி 20 தொடர்களை மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். தொடரில் விளையாடுவது மட்டும் அல்லாமல் வெற்றியும் தேடிக் கொடுக்கிறோம்.

இவ்வாறு டுவைன் பிராவோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x