Published : 25 Apr 2024 04:06 PM
Last Updated : 25 Apr 2024 04:06 PM

முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரை தாக்கிய சிறுத்தை - வளர்ப்பு நாய் காப்பாற்றியதில் உயிர் தப்பினார்

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ‘கய் விட்டல்’ ஹூமானி பகுதியில் தான் பராமரித்து வரும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென சிறுத்தையால் தாக்கப்பட்டார். ஆனால், அவரது வளர்ப்பு நாய் ‘சிகாரா’வினால் காயங்களுடன் உயிர் தப்பினார் கய் விட்டால். நாயும் சிறுத்தையிடம் கடிபட்டது.

கய் விட்டல் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். இவருக்கு இப்போது வயது 51. 1993-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் 2,207 ரன்களை எடுத்ததோடு 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 203 நாட் அவுட். 147 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய கய் விட்டல் 2,705 ரன்களை 11 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கய் விட்டலின் படங்களை வெளியிட்டு அவரது மனைவி ஹன்னா ஸ்டூக்ஸ் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், கய் விட்டல் தலை முழுவதும் காயம் ஏற்பட்டு பேண்டேஜுடன் காணப்பட்டார். சிறுத்தை தாக்கியதையடுத்து இவருக்கு ஹராரே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது தொடர்பாக கய் விட்டல் மனைவி கூறும்போது, “இவர் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான். முதலில் முதலையுடன் ஓர் இரவைக் கழித்தார். இப்போது சிறுத்தைத் தாக்குதல். அவருடன் வளர்ப்பு நாய் சிகாரா இருந்ததால் தப்பினார். இல்லையெனில் என்ன ஆகியிருக்கும் என்று சொல்ல முடியாது. வளர்ப்பு நாய் குரைத்துக் குரைத்து சிறுத்தையுடன் சண்டையிட்டு கய் விட்டலைக் காப்பாற்றவில்லையெனில் அவ்வளவுதான். நாயும் சிகிச்சை பெற்று வருகிறது” என்றார்.

சிகாரா எப்படி சிறுத்தையுடன் சண்டையிட்டது என்பதை கய் விட்டல் தன்னை பார்க்க வருபவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறாராம். அசாதாரண இந்த நிகழ்வு கய் விட்டலுக்கு முதல் முறை ஏற்படுவதல்ல.

ஏற்கெனவே ஒரு முறை 2013ம் ஆண்டு இவரது படுக்கைக்குக் கீழே 8 அடி நீள முதலை இருந்ததையடுத்து செய்திகளில் அடிபட்டார் கய் விட்டல். அன்றும் உயிர் தப்பினார். இப்போது கய் விட்டல் விரைவில் குணமடைய வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x