Published : 24 Apr 2024 09:23 PM
Last Updated : 24 Apr 2024 09:23 PM

ரிஷப் பந்த் ஹாட்ரிக் சிக்சர்ஸ்: குஜராத்துக்கு 225 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

படம்: சிவகுமார் புஷ்பாகர்

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 224 ரன்களைச் சேர்த்துள்ளது. 8 சிக்சர்களை விளாசிய ரிஷப் பந்த் 88 ரன்களைச் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கினார்.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் ஓப்பனர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் - பிரித்வி ஷா களமிறங்கினர்.

2 சிக்சர்களை விளாசி ஜேக் ஃப்ரேசர், சந்தீப் வாரியர் வீசிய 4வது ஓவரில் 11 ரன்களுக்கு அவுட்டானார். அவர் மீது என்ன பாசமோ தெரியவில்லை அதே ஓவரில் பிரித்வி ஷாவும் 11 ரன்களில் கிளம்பினார்.

அடுத்து வந்த ஷாய் ஹோப், ‘ஹோப்’ கொடுக்காமல் 5 ரன்களில் விக்கெட்டாக 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்த டெல்லி 80 ரன்களைச் சேர்த்திருந்தது.

ரிஷப் பந்த் - அக்சர் படேல் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். இதில் அக்சர் படேல் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார்.அவரை 17ஆவது ஓவரில் நூர் அகமது, 66 ரன்களில் வெளியேற்றினார்.

மறுபுறம் ரிஷப் 34 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரின் 8 சிக்சர்ஸ் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸ் என மிரட்டியதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 224 ரன்களை குவித்தது.

ரிஷப் பந்த் 88 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். குஜராத் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x