Published : 08 Feb 2018 04:22 PM
Last Updated : 08 Feb 2018 04:22 PM

சச்சின், கங்குலியின் சாதனையைத் தகர்த்த கோலி: சுவாரஸ்யமான 11 தகவல்கள்

 

கேப் டவுன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 34-வது சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஒரு நாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்துவரும் இந்திய அணி கேப் டவுன் நகரில் நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். 6 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் பல முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

அவை குறித்த பார்வை.

1. கேப் டவுனில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது சர்வதேச அளவில் தனது 34-வது சதத்தைப் பதிவு செய்தார்.

2. இதன் மூலம் கேப்டனாக இருந்து அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சவுரவ் கங்குலியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

3. விராட் கோலி நேற்று அடித்த 160 ரன்களில் 60 ரன்கள் மட்டுமே 2 சிக்சர், 12 பவுண்டரிகளால் சேர்க்கப்பட்டதாகும். மற்ற 100 ரன்களும் ஓடி எடுத்தவை. 75 ஒரு ரன்கள், 11 முறை 2 ரன்கள், ஒருமுறை 3 ரன்கள் என 100 ரன்களும் ஓடி எடுத்துள்ளார். 100 ரன்களும் ஓடி எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும்,சர்வதேச அளவில் 5-வது வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றார். இதற்குமுன் கடந்த 1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கங்குலி 98 ரன்கள் ஓடியே சேர்த்ததுதான் இந்திய அளவில் சாதனையாக இருந்தது.

4. விராட் கோலி அடித்த 160 ரன்களே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். அதற்கு முன் கடந்த 2001-ம் ஆண்டில் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த போட்டியில் சவுரவ் கங்குலி 127 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

5. கேப் டவுனில் உள்ள நியூலாண்ட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன் கங்குலி இதே மைதானத்தில் 2003-ம் ஆண்டு கங்குலி சதம் அடித்து இருந்தாலும், அது கென்யாவுக்கு எதிராகவே இருந்தது.

6. தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்பது சச்சின் டெண்டுகல்கர் கடந்த 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது நமிபியா அணிக்கு எதிராக அடித்த 152 ரன்களே ஆகும். அது சச்சினுக்கு 34-வது சதமாக இருந்தது. ஆனால், அந்த சாதனையையும் விராட் கோலி 160 ரன்கள் சேர்த்து தனது 34-வது சதத்தில் உடைத்து எறிந்தார்.

7. கேப்டன் பொறுப்பில் இருந்து சவுரவ் கங்குலி மட்டுமே இதுவரை 11 சதங்கள் அடித்து இருந்தார். அதை இந்தப் போட்டியின் மூலம் விராட் கோலி முறியடித்து தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். சர்வதேச அளவில் 22 சதங்கள் அடித்து பாண்டிங் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

8. கேப் டவுனில் நடந்த போட்டிக்கு முன்பாக விக்கெட் கீப்பர் தோனி 399 டிஸ்மிஸல் மட்டுமே செய்து இருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மார்க்கிரமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் 400 டிஸ்மிஸல் செய்த 4-வது விக்கெட் கீப்பர் எனும் முத்திரை படித்தார். இதற்கு முன், இலங்கை வீரர் குமார சங்கக்கரா(482), ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்(472), மார் பச்சர்(424) ஆகியோர் மட்டுமே 400 டிஸ்மிஸல்களுக்கு அதிகமாக செய்து இருந்தனர்.

9. இந்தத் தொடரில் தொடர்ந்து 3-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்ததன் மூலம், வெளிநாடுகளில் தொடர்ந்து 9 வெற்றியைப் பதிவு செய்த அணி எனும் பெருமையைப் பெற்றது. இதற்கு முன் 1985, 2003, 2012-13, 2013ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு தொடர்ந்து 8 வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்தது.

10. சச்சின் டெண்டுல்கர் தனது 34-வது சதத்தை 298-வது இன்னிங்ஸில் எட்டினார். அதுவும் நமிபியா அணிக்கு எதிராக 2003-ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அடித்தார். ஆனால், விராட் கோலி தனது 34-வது சதத்தை 197-வது இன்னிங்ஸில் அடித்து, சச்சினைக் காட்டிலும் 101 இன்னிங்ஸ் குறைவான போட்டிகளில் சாதனையை செய்துள்ளார். தற்போது சர்வதேச அளவில் 55 சதங்கள் அடித்து 5-வது இடத்தில் விராட் கோலி இருந்து வருகிறார்.

11. விராட் கோலி தனது 34 சதங்களில் அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 8 சதங்களும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக 5 சதங்களும் அடித்துள்ளார். மேற்கிந்தியத்தீவுகள்அணிக்கு எதிராக 4 சதங்களும், வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தலா 3 சதங்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 2 சதங்களும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருசதமும் அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x