Last Updated : 16 Feb, 2018 04:11 PM

 

Published : 16 Feb 2018 04:11 PM
Last Updated : 16 Feb 2018 04:11 PM

கப்தில் 49 பந்து சாதனை சதம் வீண்: டி20 விரட்டலில் ஆஸ்திரேலியா உலக சாதனை!

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் போட்டியில் நியூஸிலாந்து 20 ஓவர்களில் 243 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 245/5 என்று எடுத்து உலக சாதனை டி20 விரட்டலில் அதிரடி வெற்றி பெற்றது.

கப்தில் 49 பந்துகளில் எடுத்த சதம், டேவிட் வார்னர் (59), டியார்க்கி ஷார்ட் (76) ஆகியோரது அதிரடியில் மறைந்து போனது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 சிக்சர்கள் 28 பவுண்டரிகள் விளாசப்பட்டன. 32 சிக்சர்கள் ஒரு போட்டியில் என்பது இன்னொரு டி20 உலக சாதனையாகும்.

நேர் பவுண்டரி மிகவும் குறுகிய பவுண்டரி என்பது, காகிதத்தைக் கசக்கி எறிந்தால் கூட சிக்ஸ் போய்விடும் போலான தூரம்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது, இதில் மார்டின் கப்தில் 54 பந்துகளில் 6 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 105 ரன்களை எடுக்க, கொலின் மன்ரோ 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 76 ரன்கள் விளாசினார். 10.4 ஓவர்களில் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 132 ரன்கள் விளாசினர். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், ஷார்ட் இணைந்து மைதானம் முழுக்க பீல்டர்கள் வெறும் வாணவேடிக்கைப் பார்க்க 8.3 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 121 ரன்களை விளாசி உலக சாதனை விரட்டலுக்கு அதிரடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

 

வார்னர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகல் 5 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாசி இஷ் சோதியின் சற்றே வேகம் குறைத்து வீசப்பட்ட கூக்ளி பந்தில் பவுல்டு ஆனார். டியார்க்கி ஷார்ட் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 76 ரன்கள் பின்னி எடுத்தார். கிறிஸ் லின் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 3 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் 31 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசித்தள்ளினர். 18.5 ஓவர்களில் 245/5 என்று ஆஸ்திரேலியா உலக சாதனை டி20 வெற்றியை ஓவருக்கு 13 ரன்கள் வீதம் எடுத்து சாதித்தது. நியூஸிலாந்து பவுலர்கள் மொத்தம் 10 வைடுகள் 2 நோ-பால்களை வீசினர். ஆஸ்திரேலியா 8 வைடுகள் 1 நோபால் வீசியது.

ஞாயிறன்று இங்கிலாந்து/நியூஸிலாந்து அணிகள் மோதி ஆஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் யார் விளையாடுவார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

வார்னர்-டியார்க்கி விளாசல்:

இலக்கை விரட்டும் போது முதல் ஓவரில் போல்ட் 11 ரன்களை கொடுத்தார். இதில் 5 வைடுகள் அடங்கும். கீப்பர் தலைக்கு மேல் சென்ற பந்து வைடானது, பவுண்டரியும் சென்றது.

 

2-வது ஓவரில் ஷார்ட் முதலில் எட்ஜில் தேர்ட்மேன் சிக்ஸ் பிறகு இன்சைடு எட்ஜில் ஸ்டம்பைக் கடந்து ஒரு பவுண்டரி, மீண்டும் ஒரு எட்ஜ் தேர்ட்மேன் பவுண்டரி, அதிர்ஷ்டம் இல்லாத பவுலர் வீலர் ஆவார். 16 ரன்கள் வந்தது. அடுத்த சவுதி ஓவரில் ஷார்ட் ஆட முயன்ற புல் ஷாட் எட்ஜ் ஆக செய்ஃபெர்ட் கேட்சைப் பிடிக்க முடியவில்லை. 5வது ஓவரில் வீலர் வீச வார்னர் டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்சரையும் நேர் பவுண்டரியில் ஒரு சிக்சரையும் விளாச, அடுத்த சவுதி ஓவரில் வார்னர் மீண்டும் மிட் ஆஃப்க்கு மேலொரு சிக்சரையும் டீப் ஸ்கொயர் லெக்கில் இன்னொரு சிக்சரையும் அடிக்க பவர் பிளே முடிவில் 6 ஓவர்களில் 91/0 என்று பெரிய விரட்டலுக்கு அடித்தளம் அமைந்தது. பிறகு டிகிராண்ட் ஹோம் பந்தை எட்ஜ் பவுண்டரி அடித்து வார்னர் 20 பந்துகளில் அரைசதம் கண்டார். அரைசதம் எடுத்து சோதி பந்தை லாங் ஆனில் காட்டடி சிக்ஸ் ஒன்றை அடித்து அடுத்த பந்தில் பவுல்டு ஆனார்.

லின் இறங்கி ஒரு தாழ்வான புல்டாஸை சிக்ஸ் அடித்தார், பிறகு டீப் கவரில் மார்டின் கப்தில் இவருக்கு மிகவும் எளிதான கேட்சை விட்டார். ஆனால் 18 ரன்களில் இதே டீப் கவரில் இதே டிகிராண்ட் ஹோம் பந்தில் இதே கப்தில் கேட்ச் எடுக்க வெளியேறினார். இதற்குள் ஷார்ட் 30 பந்துகளில் அரைசதம் எடுத்தார். பிறகு கொலின் டி கிராண்ட் ஹோமை 2 சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் லெக் திசையில் அடித்தார் ஷார்ட். 12 ஓவர்களில் 162/2 என்று இருந்தது ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் இறங்கியவுடன் லாங் ஆனில் ஒரு மிகப்பெரிய சிக்ஸ் பிறகு ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி விளாசினார். சோதியை டீப் மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கி 14 பந்துகளில் 31 ரன்கள் என்று இருந்த போது சவுதி பந்தை ஸ்டம்பில் வாங்கி விட்டுக் கொண்டார்.

அடுத்த வீலர் ஓவர் மோசமாக அமைந்தது இரண்டு புல்டாஸ்கள் ஒன்று சிக்ஸ் மற்றொன்று பவுண்டரி என்று பிஞ்ச் பதம் பார்க்க, அடுத்த பந்தும் புல்டாஸ், நோ-பால் என்று அறிவிக்கப்பட்ட டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகியும் பயனற்று போனது, வீலர் ஓவர் பாதீயிலேயே நிறுத்தப்பட்டு போல்ட் கொண்டு வரப்பட்டார். போல்ட் வந்தவுடன் டியார்க்கி ஷார்ட் 76 ரன்களில் ஷார்ட் பிட்ச் பந்தில் விக்கெட் கீப்பரிடம் டாப் எட்ஜ் செய்து வெளியேறினார். பிஞ்ச் அதே போல்ட் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச, இருவர் வீசிய அந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது. வெற்றிக்கு 18 பந்துகளில் 17 ரன்கள் என்று இந்த ஓவரினால் ஆட்டம் மாறிப்போனது.

இடையில் ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்க ஏரோன் பிஞ்ச், டிகிராண்ட் ஹோமின் இன்னொர் புல்டாஸை லாங் ஆனில் சிக்ஸ் அடிக்க உலக சாதனை விரட்டல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

கப்தில் சாதனை!

மார்டின் கப்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பிரெண்டன் மெக்கல்லம் சாதனையைக் கடந்தார் கப்தில். மேலும் மெக்கல்லமைக் காட்டிலும் ஒரு பந்து முன்னதாக டி20 சதம் கண்டு நியூஸிலாந்தின் அதிவேக டி20 சாதனைக்குரியவருமானார் மார்டின் கப்தில், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரை எடுக்க ஆளில்லை என்பது வேறு கதை. சிக்ஸ் களிலும் 2-வது இடத்தில் உள்ளார் கப்தில். கப்தில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் நியூஸிலாந்து கொஞ்சம் மந்தமடைந்தது. கேன் ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நியூஸிலாந்து 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இல்லையெனில் டி20யில் 270-80 என்ற ஸ்கோர் போயிருக்கும். கடைசியில் ராஸ் டெய்லர் அடித்த 2 சிக்சர்கள் மூலம் நியூஸிலாந்து ஸ்கோர் 243 ரன்களை எட்டியது.

பவுலர்களுக்கு சிம்ம சொப்பன இரவாகும் இது, ஆஸ்திரேலியாவின் ஏ.ஜே. டை 3.1 ஓவர்களில் 64 ரன்களைக் கொடுத்தார். நியூஸிலாந்தின் வீலர் இதே 3.1 ஓவர்களில் இதே 64 ரன்களைக் கொடுத்தாலும் டை போல் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. டையை கவனித்தது மன்ரோ தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்தார், ஆனால் இவரிடமே ஆட்டமிழந்தார்.

மார்டின் கப்தில் தனது 9வது சிக்சரில் 49 பந்துகளில் சதம் கண்டு சாதனை படைத்தார். டை இவரையும் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x