Published : 12 Feb 2024 07:08 AM
Last Updated : 12 Feb 2024 07:08 AM
சென்னை: கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற 319 ரன்கள்தேவை என்ற நிலை உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த கர்நாடகா அணி முதல் இன்னிங்ஸில், 366 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 56 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 69.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலை பெற்ற கர்நாடக அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
தமிழக வீரர்கள் அஜித் ராம், சாய் கிஷோரின் அபார பந்துவீச்சால் கர்நாடக அணி 56.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 355 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் தமிழக அணியின் வெற்றிக்கு 319 ரன்கள் தேவைப்படுகின்றன. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இன்று தமிழக அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT