Published : 19 Jan 2024 02:11 PM
Last Updated : 19 Jan 2024 02:11 PM

ஐபிஎல் பிராண்ட் வேல்யூ 28% உயர்ந்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு - மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே டாப்!

ஒரு தனியார் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டால் அதை ‘டெக்காகார்ன்’ என்று வர்த்தக உலகில் அழைக்கின்றனர். அந்த வகையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்து டெக்காகார்ன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக இணைந்துள்ளது.

பைஜூஸ், ஸ்விக்கி, பிளிப்கார்ட், போன்பே, நைக்கா உள்ளிட்ட ‘டெக்காகார்ன்’ நிறுவனங்களுடன் தற்போது ஐபிஎல் டி20 லீகும் இணைந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் பம்பர் சீசன் என்று கூறப்படுகிறது, பெரிய அளவில் லாபம் ஈட்டித்தந்ததோடு மதிப்புக்கூட்டுதலையும் உருவாக்கியுள்ளது. உலகின் முன்னணி பிராண்ட் வேல்யுவேஷன் ஆலோசக நிறுவனமான பிராண்ட் பைனான்ஸின் புதிய மதிப்பீடு ஐபிஎல் லீகின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கு நேரில் வந்து பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது, போட்டிகள் நடக்கும் தினத்தில் ஸ்டேடியம் நிரம்பி வழிகிறது. பல்வேறு கம்யூனிகேஷன் சாதனங்களிலும் ஐபிஎல் போட்டிகளைப் பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊடக அளவில் பெரிய அளவில் கூட்டாண்மை, அனைத்து மீடியாக்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கவரேஜ் போன்றவை, விளம்பரதாரர்களிடையே ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கை ஆகியவை கூட்டாக ஐபிஎல் பிராண்ட் வேல்யூவை பலப்படுத்தியுள்ளன.

ஐபிஎல் இப்போது புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான சிறந்த தளமாக உள்ளது, இது இந்தியாவில் மிகப்பெரிய பார்வையாளர்களை எட்டுகிறது. ஐபிஎல்-இன் ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு 2008 முதல் இப்போது வரை 433% அதிகரித்துள்ளது என்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்டம் பற்றி நமக்கு தெரியவருகிறது.

பிராண்ட் ஃபைனான்ஸ், லண்டனின் விளையாட்டு சேவைகளின் தலைவர், ஹ்யூகோ ஹென்ஸ்லி ஐபிஎல் பற்றிக் கூறும்போது, “ஐபிஎல் பிராண்ட் மற்ற அனைத்து T20 லீக்குகளுக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக உள்ளது, இந்த வர்த்தக மாதிரியை உலக அளவில் எவ்வாறு வெற்றிகரமாக கொண்டு சேர்க்க முடியும் என்பதை விளக்குகிறது. ஐபிஎல் பிராண்டின் வெற்றியின் பின்னணியில் வலுவான நிர்வாகம் உள்ளது. மதிப்பை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிசெய்வதில் ஐபிஎல் வர்த்தக ரீதியாக முதன்மை வகிக்கிறது” என்றார்.

அதே போல் ஐபிஎல் உரிமையாளர்கள் மட்டத்தில் மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் வேல்யூ மற்ற அணிகளைக் காட்டிலும் அதிகம், அதாவது நம்பர் 1 பிராண்ட் வேல்யூ உள்ளது மும்பை இந்தியன்ஸ் இதன் பிராண்ட் வேல்யூ 87 மில்லியன் டாலர்களாகும். 2வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 81 மில்லியன் டாலர்களுடனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78.6 மில்லியன் டாலர்களுடன் 3ம் இடத்திலும், ஆர்சிபி அணி 69.8 மில்லியன் டாலர்களுடன் 4ம் இடத்திலும் உள்ளன. ஐபிஎல் தொடருக்குள் நுழைந்து 2 ஆண்டுகளே ஆன குஜராத் டைட்டன்ஸ் 8-வது இடத்திலிருந்து 38% வளர்ச்சியுடன் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன் பிராண்ட் மதிப்பு வளர்ந்து கொண்டே வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் பிராண்ட் வேல்யூவில் விரைவில் சிஎஸ்கேவை எட்டிப்பிடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8வது இடத்தில் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் உள்ளது. இதன் பிராண்ட் வேல்யு 47 மில்லியன் டாலர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிரான்சைஸுக்குத்தான் டாப் தரவரிசையான ஏஏஏ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. பிசினஸ் ஸ்ட்ரெந்த் இண்டெக்ஸ் என்று கூறப்படும் அளவீட்டில் சிஎஸ்கே நூறில் 81.8% என்று வர்த்தக முதலீட்டு உலகில் ஸ்கோர் செய்துள்ளது. இது டிக் டாக், மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனங்கள் எட்டிய பிசினஸ் ஸ்ட்ரெந்த் இண்டெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பிசினஸ் ஸ்ட்ரெந்த் இண்டெக்ஸில் மும்பை இந்தியன்ஸ் 2ம் இடத்திலும் குஜராத் டைட்டன்ஸ் 3ம் இடத்திலும் உள்ளது.

இந்த பிசினஸ் ஸ்ட்ரெந்த் இண்டெக்ஸ், ரேட்டிங், வர்த்தக வலு போன்றவைதான் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன போலும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x