Last Updated : 17 Nov, 2023 06:29 AM

2  

Published : 17 Nov 2023 06:29 AM
Last Updated : 17 Nov 2023 06:29 AM

40 நிமிட மோசமான ஆட்டத்தை மாற்றிய மொகமது ஷமி!

ஷமி

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிவிடும் சூழ்நிலை உருவான நிலையில், மொகமது ஷமி தனது அபாரமான பந்துவீச்சால் 7 விக்கெட்களை கொத்தாகபறித்து இந்திய அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதிக்க பெரிதும் உதவினார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே படபடப்பை நேற்றுமுன்தினம் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் மனதில் விதைத்தது நியூஸிலாந்து அணி. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் மான்செஸ்டரில் இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்த நியூஸிலாந்து, கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களின் இதயங்களில் மீண்டும் ஒருமுறை கத்தியை வைத்தது.

இவை அனைத்தும் விராட் கோலியின் 50-வதுசாதனை சதம், நாக் அவுட் சுற்றில் ஸ்ரேயஸ் ஐயரின் விரைவான சதம், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோரது அதிரடியான மட்டை வீச்சு ஆகியவற்றால் இந்திய அணி 397 ரன்களை வேட்டையாடிய பின்னர் அரங்கேறியது. இத்தனைக்கும் ஐசிசி தொடர்களின் நாக் அவுட் சுற்றில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்திருந்தது.

ஐசிசி தொடர்களில் கடந்த 8 வருடங்களில் 3 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்த ஒரே அணியான நியூஸிலாந்து தனது பாணியில் போராடி, இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது. இதனால் 40 நிமிடங்கள் இந்தியஅணி மோசமான ஆட்டத்தை விளையாட, அந்த அணிகட்டாயப்படுத்தியது. கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஜோடி தாக்குதல் ஆட்டம் தொடுத்து, இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டிய போதெல்லாம் வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த 33 ஆயிரம் ரசிகர்கள் அமைதியிலும், அதிர்ச்சியிலும் உறைந்தனர். இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான ஆட்டங்களில் நியூஸிலாந்து அணி வெற்றியை சுவைத்தது இதுபோன்ற கட்டங்களில்தான்.

மிரள வைத்த கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல்லின் மட்டை வீச்சு, 12 வருடங்களுக்கு முன்னர் இதே மைதானத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை இம்முறை சோகத்துடன் விடைபெறச் செய்துவிடுமோ என்ற நிலையை உருவாக்கியது. சுமார் 40 நிமிடங்களுக்கு இந்த நிலை நீடித்தது. பனிப்பொழிவு இல்லாத நிலையில் மின்னொளியில் பந்துகள் சீராக செல்லவில்லை. ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ் ஆகியோர் ஸ்விங்கை கட்டுப்படுத்த தடுமாறினர். வைடுகளை அதிகம் வீசினர்.

நடப்பு உலகக் கோப்பையில் வான்கடே மைதானத்தில் முதல் ஐந்து ஓவர்களுக்குள் இலக்கை துரத்தும் அணிகளின் டாப் ஆர்டர்களை தகர்த்துவிடலாம் என்று கருதப்பட்ட நிலையில் நியூஸிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்தது. இதனால் வான்கடே மைதானத்தின் தன்மை இந்திய பந்து வீச்சாளர்களுக்கு வித்தியாசமாக தோற்றம் அளித்தது.

எனினும் மொகமது ஷமி, பந்தை கையில் எடுத்ததுமே டேவன் கான்வேவை காலி செய்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஷமி, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது 5-வது முறையாக அமைந்தது. இதன் பின்னர் அபாரமான பார்மில் இருந்த ரச்சின் ரவீந்திராவை பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால் இதன் பின்னர் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஜோடியால் இந்திய அணி திணறியது. இதனால் இந்திய அணியின் முகாமில் பதற்றம் நிலவத் தொடங்கியது.

இதன் விளைவாக 8.20 மணி முதல் 9 மணி வரை இந்திய அணியின் இதயம் நொறுங்குவதை நோக்கி பயணிப்பதற்கான அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின. பல்வேறு முறை மட்டை விளிம்பில் பந்துகள் பட்டு பவுண்டரியை நோக்கிப் படையெடுத்தன. ரவீந்திர ஜடேஜா நோ-பால் வீசினார். எளிதான ரன் அவுட் வாய்ப்பு கே.எல்.ராகுலின் தவறால் பறிபோனது. சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பீல்டிங்கில் தவறு செய்தனர். ஜடேஜா ஓவர் த்ரோவின் வாயிலாக 4 ரன்களை வாரிகொடுத்தார்.

இந்திய அணியின் அழுத்தத்தை அப்பட்டமாக காட்டியது இந்த ஓவர் த்ரோதான். பும்ரா வீசிய 29-வது ஓவரில் கேன் வில்லியம்சன் மிட் ஆஃன் திசையில் கொடுத்த எளிதான கேட்ச்சை மொகமது ஷமி தவறவிட்டார். இது மைதானத்தில் இருந்த 33 ஆயிரம் ரசிகர்களை மட்டும்அல்ல தொலைக்காட்சியில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்த கோடிக் கணக்கானவர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. ஷமி தவறவிட்ட கேட்ச்சால் ஆட்டம் கைவிட்டு சென்றுவிடுமோ என்ற பதற்றமும் ரசிகர்களின் மனதை தொற்றிக்கொள்ளாமல் இல்லை.

ஏற்கெனவே 150 ரன்களை கடந்திருந்த கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஜோடி இந்த கேட்ச் தவறவிட்ட பின்னர் வீசப்பட்ட 3 ஓவர்களில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசியது. இது இந்திய அணியின் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. ஆனால் 33-வது ஓவரை வீசிய மொகமது ஷமி அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினார். 3-வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்து அச்சுறுத்தலாக திகழ்ந்த கேன் வில்லியம்சனையும் (69), இதன் பின்னர் களத்துக்குள் புகுந்த டாம் லேதமை ரன் கணக்கை தொடங்கவிடாமலும் வெளியேற்றினார் மொகமது ஷமி.

ஓரே ஓவரில் அவர் கைப்பற்றிய இந்த இரு விக்கெட்கள் தான் இந்திய அணியை வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தது. தொடர்ந்து சரியான திசை, சிறந்த நீளத்தில் பந்து வீசி நெருக்கடி கொடுத்த மொகமது ஷமி 7 விக்கெட்களை கொத்தாக வாரினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 7 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய மொகமது ஷமி 23 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் உலகக் கோப்பை தொடர்களில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார். அவரது சாதனை இத்துடன் முடிவடையவில்லை, நடப்பு தொடரில் 4 முறை 5 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். வெற்றிக்கு பின்னர் மொகமது ஷமி கூறும்போது, “கடந்த இரு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இனிமேல் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இதனால் வெற்றிக்காக எல்லாவற்றையும் செய்து பார்க்க விரும்பினோம். கிடைத்த வாய்ப்பை நாங்கள் விட்டுவிட விரும்பவில்லை” என்றார்.

வேகம், விவேகத்துடன் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியை மொகமது ஷமி தனது எக்ஸ்பிரஸ் வேகத்தால் தடம்புரளச் செய்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவரது பந்து வீச்சு வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது. இந்தத் தொடர் அவரது வாழ்நாளில் என்றும் நிலைத்து நிற்கும். அந்த அளவுக்கு அவர், விளையாடிய 6 ஆட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இன்னும் ஒரே ஒரு ஆட்டம்தான், கோப்பையை கைகளில் ஏந்துவதற்கு. இறுதிப் போட்டியில் மொகமது ஷமியின் ஆக்ரோஷம் தொடர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x